இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு 203 நாடுகளில் உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் விமான நிலையங்களில் வருகைப்புரிந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 288 பயணிகளுக்கு விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 77ஆயிரத்து 330 பயணிகள் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும், தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 81 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் தனி வார்டில் 630 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
2,354 பயணிகளின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில், 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் என 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாவட்டத்தில் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 124 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்' - தமிழ்நாடு அரசு வேண்டுகொள்