சென்னை: ஆருத்ரா நிறுவனம் சுமார் 2,400 கோடி ரூபாய் அளவில் மிகப்பெரிய ஊழல் செய்து இருக்கிறது. இதற்குப் பின்னால் பாஜக உள்ளது. ஆகவே, தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரடியாக அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (மார்ச் 29) செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வப் பெருந்தகை, விஜயதரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது பேசிய கே.எஸ். அழகிரி, "காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால், நாட்டின் சட்ட ஒழுங்கை கெடுத்திருக்க முடியும். சட்டம் ஒழுங்கை திணறடித்திருக்க முடியும். ஆனால், ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் படி மகாத்மா காந்தியை போல அமைதியான வழியில் நாங்கள் போராடுகிறோம். முதல் கட்டமாக மார்ச் 26ஆம் தேதி நாடு முழுவதும் அறப்போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வட்டாரம் முதல் தேசிய அளவிலான போராட்டங்களை நடத்த இருக்கின்றோம். வரும் மார்ச் 31ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய காங்கிரஸ் போராட்டங்கள் குறித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் அறிவிக்க உள்ள போராட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
ராகுல் காந்தி, அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசினால் அதற்கு ஆளுங்கட்சி பதில் சொல்ல வேண்டும். அரசாங்கம் பதில் சொன்னால், அது சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும். அதன் உண்மையை வெளி கொண்டுவர வேண்டும். அது போன்ற ஒரு சூழல் வரக்கூடாது என்பதற்காகவே பிரதமர் மோடி தனது நண்பரான அதானியை காப்பாற்றுவதற்காக ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்துள்ளார்.
நாட்டில் எந்த தொழிலதிபர்களுக்கும் கிடைக்காத சலுகைகள் எப்படி அதானிக்கு மட்டும் கிடைக்கின்றது. நீங்கள் வெளிநாடு செல்லும் போதெல்லாம் அதானி உங்களுடன் வருவதற்கான காரணம் என்ன. நீங்கள் சென்று வந்த உடன் அந்த நாட்டிற்கு அதானி செல்வதற்கான காரணம் என்ன. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து முதலீடுகளும் அதானிக்கு செல்வதற்கான காரணம் என்ன. அதானின் கடன் விவரங்களை நாடாளுமன்றத்தில் சொல்ல முடியாது என்று எப்படி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சொல்ல முடிகிறது.
இப்படியெல்லாம், நாட்டின் மீது கொண்ட பொறுப்புணர்வால் ராகுல் காந்தி கேள்வி கேட்டு வருகிறார். ஆனால், இதற்கெல்லாம் அரசாங்கத்தால் பதில் சொல்ல முடியவில்லை. ஏப்ரல் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்தும் மாவட்டங்களில் இருக்கக்கூடிய மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம்.
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைப்பது, மறியலில் ஈடுபடுவது, ஒரு நாள் போராட்டம் நடத்துவது என்பது போன்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. இதை ஒரு மக்கள் இயக்கமாக நடத்தி ஒரு மாத கால தொடர் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு பின்பு ஒரு மாத கால தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையிடம் நேரடி விசாரணை வேண்டும்: தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆருத்ரா நிறுவனம் சுமார் 2,400 கோடி ரூபாய் அளவில் மிகப்பெரிய ஊழலை நடத்தி உள்ளது. இந்த ஊழலுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. இது நிதி நிறுவனம் செய்திருக்கக் கூடிய ஊழல் அல்ல. ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு பின் தமிழ்நாடு பாஜக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய மூன்று நபர்களை அழைத்து நாங்கள் விசாரித்தோம். அதனடிப்படையில் பாஜகவின் முதலீடுகள் இருப்பதை கண்டறிந்தோம்.
அவர்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியோடு இந்த நிறுவனம் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையில் நாங்கள் முதலீடு செய்தோம் என்று தெரிவித்தனர். ஆகவே, தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரடியாக அழைத்து விசாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த மோசடி குறித்த உண்மை நிலவரம் தெரியவரும்.
குற்றவாளிகளின் புகலிடமாக பாஜக இருக்கிறது. சமூக விரோதிகள், குற்றவாளிகள் என ஏராளமானோர் பாதுகாப்பு கருதி பாஜகவில் இருக்கின்றனர். இது தேசத்திற்கு விரோதமாகும். நெய்வேலி நிலப்பிரச்சனையில் காங்கிரஸ் நிலைப்பாடு என்னவென்றால், வளர்ச்சி வேண்டும் என்றால், நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் உண்மை நிலை. நிலம் கையகப்படுத்தும் போது அதற்கான உரிய தொகை மக்களுக்கு வழங்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏஎஸ்பி பல்பீர் சிங் சஸ்பெண்ட் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்