நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் பல்வேறு பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மூத்தத் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, பல்லாயிரக்கணக்கானவர்கள் சிரமப்பட்டுப் பல இன்பங்களை இழந்து கிடைத்த சுதந்திரம் தான் இந்த சுதந்திரம். ஆனால் இன்றைக்கு இருக்கிற சோகம் என்னவென்றால் இந்த சுதந்திரத்தில் பங்கேற்காத, ஒரு மணி நேரம் கூட சிறை செல்லாத, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த பாஜக இன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தான் காலத்தின் துயரம்.
காஷ்மீர் மட்டும் குறி வைக்கப்பட்டதற்கு மதம், இன துவேஷம் தவிர வேறு காரணம் இல்லை. நாம் இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் மீண்டும் நாடு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் அதிகாரம் இருக்கின்றது. ஒரு மாநிலத்தில் வசிக்கின்ற மக்களின் கோடிக்கணக்கான உரிமைகள் பறிப்பதில் என்ன ராஜதந்திரம் இருக்கின்றது என ரஜினி கூறிய கருத்துக்கு கே.எஸ் அழகிரி பதில் கேள்வியெழுப்பியுள்ளார்.