தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இதில் பெரும்பான்மையினர் சென்னையைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
இந்த நிலையில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார். அவரின் அழைப்பை ஏற்று இன்று மாலை முதலமைச்சர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிக்கைக்கு (ராஜ்பவன்) வந்தார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
பின்னர், ஆளுநரைச் சந்தித்து சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அனைவரும் விளக்கமளித்தனர். அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பின்னர், ஆளுநரை முதலமைச்சர் இன்று மூன்றாவது முறையாக சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.