சென்னை: பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக தொல்லியல் துறை சார்பில் பல்வேறு கட்டங்களாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் பல்வேறு வகையான பண்டைய கால பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் ஆகிய மூன்று இடங்களில் முதற்கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெறவுள்ளன. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் இரண்டாம் கட்டமாக அகழாய்வு நடைபெறவுள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் மூன்றாம் கட்ட பணிகள் நடைபெறவுள்ளன. அதேபோல் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொல்லியல் தளங்களான அகரம், கொந்தகையில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒரே ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்வது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.6) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக, சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டி ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பின்னர் சிவகங்கை மாவட்டம், கொந்தகை கிராமத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கீழடி புனை மெய்யாக்க செயலியையும் (Keeladi Augmented Reality App) தொடங்கி வைத்தார். இந்த செயலி, கீழடி அருங்காட்சியகத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கீழடி அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள 200 தொல்பொருட்களை AR மற்றும் 3D-யில் பார்க்கலாம். அதோடு கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.