கரோனா தொற்றை சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து பங்களிப்பினை அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நிதியை பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியாக (CSR fund) கணக்கிட தெளிவுரை வழங்குமாறு பல்வேறு நிறுவனங்கள் கோரியுள்ளனர்.
மத்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் துறை தனது சுற்றறிக்கையில், மக்கள் நலம் பேணுதல், மேம்படுத்துதல், சுகாதாரம், நோய்த் தடுப்பு, தூய்மைப் பணி, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் கீழ் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கு அளிக்கப்படும் நிதியும், பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்பிற்கு தகுதி பெறும் என தெளிவுரை வழங்கியுள்ளது.
இதையடுத்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆணையின்படி 24.3.2020 முதல் 30.6.2020வரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப் பெறும் நன்கொடையைக் கரோனா தடுப்பு பணிகளுக்குப் பின்வருமாறு பயன்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதில்,
- தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்தல்
- மருத்துவமனைக்குத் தேவைப்படும் நுகர்பொருள்கள், வென்ட்டிலேட்டர் முதலிய மருத்துவ உபகரணங்கள் வாங்குதல்
- தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தப்பட்ட வசதி, பொதுச் சுகாதார உள்கட்டமைப்பு, தடுப்பு சுகாதார பராமரிப்பு ஆகியவற்றை உருவாக்குதல்
- வீடற்ற ஏழைகள், புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு உணவளித்தல் உலர் உணவுப் பொருட்களை வழங்குதல்
எனவே, பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் இதன்மூலம் கிடைக்கும் வருமானவரி சலுகையைக் கருத்தில் கொண்டு, கரோனா தடுப்புப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள வசதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்கி அரசுக்கு தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.