சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடாவைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஜனவரி 29ஆம் தேதிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜனவரி 29ஆம் தேதிமுதல் பிப்ரவரி 10ஆம் தேதிவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஒன்பது கோடியே 28 லட்சத்து 37 ஆயிரத்து 192 ரூபாய் மதிப்பிலான பணம், பொருள்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இதில், ஆறு கோடியே 89 லட்சத்து 63 ஆயிரத்து 788 ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கோடியே 37 லட்சத்து 19 ஆயிரத்து 120 ரூபாய் மதிப்பிலான பொருள்கள், ஒரு கோடியே ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 294 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: பிப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு