மீன்வளத்துறை:
விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் கழிவேலியில் பக்கிங்காம் கால்வாய்பகுதியில் மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.235 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த துறைமுகங்களில், 250 இயந்திர படகுகளும், 1,100 வெளிப் பொருத்தும் மோட்டார் கண்ணாடி நாரிழைபடகுகளும் நிறுத்த இயலும். இதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறைக்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம், ஆற்காட்டுத்துறையில் 100 விசைப் படகுகள் மற்றும் 500 கண்ணாடி நாரிழைப் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக ரூ.150 கோடி செலவில் ஒருபுதிய மீன்பிடிதுறைமுகம் அமைக்கப்படும். இதனால், இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 10,000 மீனவர்கள் பயன் பெறுவார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகூர் மீன்பிடி இறங்குதளம் அமைந்துள்ள வெட்டார் ஆற்றின் தெற்குப் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. முகத்துவாரப் பகுதியில் அதிகப்படியான வண்டல் மண் படிந்ததன் காரணமாக படகுப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வண்டல் மண் படிவதைத் தடுத்திடவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடவும், படகுகளை சுலபமாக இயக்குவதற்கும், வெட்டார் ஆற்றின் வடக்குப் பகுதியில் கடல் அரிப்புதடுப்புச் சுவர் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இதனால் 200-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப் படகுகளும் நாகூர் மீன்பிடி இறங்குதளத்தைப் பயன்படுத்த முடியும். இத்திட்டத்தால் மீனவர்கள் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கச் செல்லமுடியும்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்திலுள்ள பெரியதாழையில், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், மீன்பிடிஉடமைகளை கடலரிப்பில் இருந்து பாதுகாக்கவும், வடக்கு கடற்கரையில் ஏற்படும் கடலரிப்பினை குறைத்திடும் வகையில், இரண்டு சிறிய நேர்கல் சுவர்களை அமைத்து கடற்கரையினை பாதுகாக்க அலைதடுப்புச்சுவர், கருங்கற்களாலும் மற்றும் கான்கிரீட் கற்களாலும் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை மீன்பிடி துறைமுகத்தில் 200 மெட்ரிக் டன் அளவில் மீன்கள் கையாளப்படுகிறது. சுமார் 30,000 பேர் தினமும் இத்துறைமுகத்தில் மீன்பிடி மற்றும் மீன் விற்பனைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இம்மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரூ.10 கோடி செலவில் துறைமுகத்தின் தென்பகுதியில், சிறிய படகு அணையும் தளமும், பெரியபடகு அணையும் தளமும் மற்றும் மீன் விற்பனைகூடமும் அமைக்கப்படஉள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை:
ஏழ்மை நிலையிலுள்ள பெண் பயனாளிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, தமிழ்நாட்டிலுள்ள 20 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளிலுள்ள பெண் பயனாளிகளுக்கு 90 சதவீதம் மானியத்தில் பயனாளிக்கு தலா 10 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள், ஒரு வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக் கிடா வீதம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தில், ஆடுகளை கொள்முதல் செய்தல், போக்குவரத்து செலவு, ஆடுகளுக்கு காப்பீடு செய்தல் ஆகியவற்றுடன் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஊட்டச் சத்துகளும் வழங்கப்படும்.
பொருளாதார நலிவிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க கால்நடைகளுக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை பயனாளிகளின் பங்களிப்பு மற்றும் மத்தியஅரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடுஅரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 2.50 லட்சம் கால்நடைகள் ரூ.22.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் காப்பீடு செய்யப்படும். பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 70 சதவீத மானியத்துடனும் மற்ற பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்துடனும், மலைப் பகுதியில் உள்ள பட்டியல் வகுப்பு, பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 80 சதவீத மானியத்துடனும், இதர பயனாளிகளுக்கு 60 சதவீத மானியத்துடனும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
உலகத் தரத்துடன் சிறந்த ஆய்வக முறைகளுடன் கூடிய ஒரு புதிய மத்திய கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும். இந்த ஆய்வகத்தில், மத்தியநோய் ஆய்வுக் கூடம், ஏற்றுமதிக்கான கால்நடைஉற்பத்திப் பொருட்கள் ஆய்வுக்கூடம், கால்நடை மருத்துவர்களுக்கான தங்கும் வசதியுடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சிக்கூடம் முதலிய வசதிகள் ஏற்படுத்தப்படும். சிறந்த கால்நடை மருத்துவ சேவையை வழங்குவதற்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு அவசியமாகும். அந்த வகையில், புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டடங்கள் நடப்பாண்டில் கட்டித் தரப்படும்.
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை:
மாநில தகவல் ஆணையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டப்பட வேண்டிய அவசியத்தைக் கருதி, இதற்கென சென்னை, சைதாப்பேட்டையில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன. மாநில தகவல் ஆணையத்திற்கு, விசாரணை அறைகள், ஆணையர்களுக்கான அறைகள், அலுவலக அறைகள், மனுதாரர்களுக்கான காத்திருக்கும் அறைகள், நூலகம், கூட்ட அரங்கு, வாகன நிறுத்துமிடம், மனுதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திட தரைத்தளம் மற்றும் 5 தளங்களைக் கொண்ட சொந்தக் கட்டடம் ஒன்று ரூ.27.79 கோடி மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.