இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவான்மியூர், அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள 20 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன திருமண மண்டபத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
84 ஆயிரத்து 592 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன திருமண மண்டபத்தில் ஆயிரத்து 388 இருக்கைகள் கொண்ட திருமணக் கூடம், 552 இருக்கைகள் கொண்ட உணவருந்தும் கூடம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
பின்னர், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம், அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், ஆற்காடுகுப்பம், அருள்மிகு சோளீஸ்வரர்சுவாமி திருக்கோயில் மற்றும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று அன்னதானக் கூடங்களையும் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 59 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடுவதற்கான அடையாளமாக, ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.