சென்னை:Pongal Bonus: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை (1-1-2022) முதல் 31 விழுக்காடாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.3000 - பொங்கல் பரிசு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என (7-9-2021) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத்தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 விழுக்காடு உயர்த்தி, (1-1-2022) முதல்
17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021)தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8, 724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
மேலும், பொங்கல் பரிசாக 'C' மற்றும் 'D' பிரிவுப் பணியாளர்களுக்கு ரூ,3000; ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.1000, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டச் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.