நடந்து முடிந்த 17ஆவது நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக உறுப்பினர், கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.
அதில், கனிமொழி தனது கணவர் அரவிந்தின் வருமான கணக்கை வேட்புமனுவில் மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டதால், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தற்போதைய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடர்ந்த தேர்தல் வழக்கை திரும்ப பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.
நீதிமன்ற உத்தரவின்படி தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கு திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு கடந்த 9ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழிசை செளந்தர்ராஜனின் தேர்தல் வழக்கு திரும்ப பெறப்படுவது குறித்து பொதுமக்கள் கருத்தை தெரிவிக்க ஏதுவாக அரசிதழினை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் வெளியிட்டு தூத்துக்குடி மக்களுக்கு மனுதாரர் சார்பாக தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: கனிமொழிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுகிறார் தமிழிசை!