2019 மக்களவை பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றார். ஆனால், அவரின் வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசை, தூத்துக்குடி வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த தேர்தல் வழக்கை சேர்த்து விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக உரிய நோட்டீஸை அரசிதழில் வெளியிட நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்த நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையையும் வாக்காளர் சந்தான குமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கையும் அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: எங்க போனாலும் விடமாட்டேன்...கனிமொழி மீதான வழக்கில் தமிழிசை தரப்பு பதில்