சென்னை ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்த 13 பெண்கள் உள்பட 36 பேர் நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் தாயகம் திரும்புவதற்குள் கரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் நாடு முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியா - நேபால் எல்லையான சோனூல் (Sonool) என்ற பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள், தங்களின் நிலை குறித்து தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மக்களவைத் தலைவருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஓபிஆர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேபாளில் உள்ள துணைத் தூதரகத்திற்கு தகவல் கொடுத்தது.
அதனடிப்படையில் இவர்கள் அனைவரும் நேபாளில் இருந்து அழைத்துவரப்பட்டு இந்திய எல்லையை ஒட்டியுள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் நாளை சென்னை அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.