தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மறுக்கும் நோக்கத்தில்தான் உச்ச நீதிமன்றத்தை, பாஜக அரசு பயன்படுத்தி ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையை காலம் தாழ்த்தி திறக்க வைக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு தமிழ்நாட்டின் தலையில் கட்டப்பட்டது.
2018ஆம் ஆண்டு மே18ஆம் தேதி உத்தரவுக்கிணங்க காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டும், ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; அதற்குப் பிறகும்கூட அந்த ஆண்டில் நீர் எதுவும் விடுவிக்கப்படவில்லை.
2019 ஆம் ஆண்டு ஜூன் 12ல் அணை திறக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் இதற்காக ஜூன் 7ஆம் தேதியே காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடியதாகவும், அப்போது கர்நாடகத் தரப்பு, ‘மழையில்லை, அதனால் தண்ணீர் இல்லை’என்று சொன்னதாகவும், அதனால் வரும் ஜூன் 24ஆம் தேதியன்று மீண்டும் கூடிப் பேச இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியென்றால், தமிழ்நாட்டிற்கான நீரை விடுவிக்காமல், பிரச்னையை மிக எளிதாகக் கடந்து செல்வதே நடந்திருக்கிறது. இதைப் பார்க்கும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்ச நீதிமன்றத் துணையுடன் காவிரி மேலாண்மை “ஆணையம்” அமைத்தது, தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்கு எழுதப்பட்ட முடிவுரையாகவேப் படுகிறது.
கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டிற்கு எதிராகவுமே பிரச்னையைக் கொண்டுசென்று இப்போது மோடியால் முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது. தான் எழுதிய இந்த முடிவுரையை மத்திய அரசே கிழித்தெறிந்துவிட்டு, பாரபட்சமின்றி நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்; இல்லாவிட்டால், மத்திய அரசைத் தவிர்த்து, நேரடியாகவே கர்நாடகாவுடன் வழக்காடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்படக்கூடும். இந்த நிலை உருவாகாமல் தவிர்ப்பதுதான் மத்திய அரசின் பொறுப்பும் கடமையுமாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.