சென்னை: சமுதாயம் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார் என ஜான்பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குடும்பன், காலாடி பன்னாடி, கடையன், பள்ளன் உள்ளிட்ட ஏழு பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்தப் பிரிவுகளை பட்டியல் வகுப்பிலிருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தது.
இந்தச்சூழ்நிலையில், குடும்பன், காலாடி, பன்னாடி உள்ளிட்ட ஏழு பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணை பிறப்பிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பதாக அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் முதலமைச்சரை இன்று சந்தித்தார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையை முதலமைச்சர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் ஏழு உள்பிரிவுகளையும் பட்டியல் வகுப்பிலிருந்து வெளியேற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் கொங்கு ஈஸ்வரனை தூண்டிவிட்டுவருகிறார். சமுதாயம் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார். சட்டமேதை அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தாத திமுகவினர், மக்களை இன வாரியாகப் பிரித்து அரசியல் செய்ய நினைக்கின்றனர்.
திமுக தலைவர் மக்களின் ஒற்றுமையை உடைக்க நினைக்கிறார். மக்கள் ஸ்டாலின் தெரிவிப்பதை நம்ப வேண்டாம் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு ஜான் பாண்டியன் வாழ்த்து!