சென்னை: தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான வா.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24 சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியகராஜன் தாக்கல் செய்துள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் நிதி அமைச்சர் அவர்களை அழைத்துப் பேசி தனிக் கவனம் செலுத்தியுள்ளார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
அனைத்து தரப்பினருடைய நலனையும் மையப்படுத்திய நிதிநிலை அறிக்கையாக வெளிவந்துள்ளதை பொதுநோக்கர்கள் வரவேற்று பாராட்டுகின்றனர். நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து படிக்கும் போது தாய்த் தமிழில் படிக்கும் பயிற்சி இன்னமும் அவரிடம் முழுமையாக சென்று அடையவில்லை என்பதை உணர முடிகிறது. வாழ்க தமிழ்!..
தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தவண்ணம் மகளிர்க்கான உரிமைத்தொகை மாதம் தோறும் ரூபாய் 1000 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் தொடங்கி வைக்கிறார். என்ற அறிவிப்பினை வரவேற்று மகிழ்கிறோம். 33,000 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதை நன்றி பாராட்டும் உணர்வுடன் வரவேற்று மகிழ்கிறோம்.
நிர்வாக ரீதியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து நிர்வாகப் பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையில் இணைத்து செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை பெரிதும் வரவேற்கிறோம். பணி முன்னுரிமை, பணப் பலன்களில் இழப்பு ஏதுமின்றி அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பினையும் பெரிதும் வரவேற்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "பள்ளிக்கல்வித்துறைக்கு 2022-23 இல் 36 ஆயிரத்து 895 கோடி ஒதுக்கீடு செய்திருந்தார்கள். 2023-24 ஆண்டில் 40,299 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம். அதேபோல் உயர் கல்விதுறைக்கு 6,967 கோடி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு 5698 கோடி ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் கட்டுவதற்கும், ஆய்வகங்கள் அமைப்பதற்கும் 1,500 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம். அரசு ஊழியர்கள் வீடு கட்டும் நிதி 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்வு உயர்த்தி உள்ளனர். 62 ஆயிரம் கோடி வருவாய் நிதி பற்றாக்குறை இருந்ததை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதுள்ளனர்.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் கைவிடப்பட்டது ஏன்? ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. இடம்பெறுவதற்கான வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணமும் நிதித் துறையில் இருப்பதாக அறவே எங்களால் உணர முடியவில்லை. எங்கள் அரசு; நமது அரசு என்ற உணர்விலிருந்து விடுபட்டு இது இந்த அரசு யாருக்கான அரசு என்று கேட்கத் தொடங்கி விட்டனர்" ஆவேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "அதேபோல நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகை, கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சரண் விடுப்பு தொகை அனுமதி கூட இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரையில் கல்வியாளர்கள், ஆசிரியர்களுடைய கருத்துக்களை கேட்பதை புறந்தள்ளிவிட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் சில NGO ஆகியோரின் கருத்துக்களை மட்டும் கேட்டுக்கொண்டு புதுப்புது திட்டங்களை பெயர் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறையையும் மாணவர்களின் கல்வி நலனையும் பெரிதும் பாழ்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
'எண்ணும் எழுத்தும்' திட்ட அறிமுகத்தால் பின்தங்கிய மாணவர்களுக்கு வேண்டுமானால் பயனளிக்குமே தவிர, கற்றல் திறனில் முன்னணியில் உள்ளவர்களுக்கு எவ்வித முன்னேற்ற நிலையையும் அவர்களுக்கு ஏற்படுத்தாது. எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டாடப்படுகிற திட்டமே அல்ல. இந்த திட்டத்தை கொண்டாடுபவர்கள் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வி நலனில் அக்கறை காட்டாதவர்களாகத்தான் இருக்க முடியும்.
40 மாணவர்கள் பயிலக்கூடிய பள்ளியில் ஓராசிரியர் பாடம் நடத்தி வருகிறார். 61 மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியில் ஈராசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவர்களால் இந்த திட்டத்தினை எப்படி நிறைவேற்ற முடியும்? அரும்பு, மொட்டு, மலர் பெயர் சிறப்பாகத் தான் இருக்கிறதே தவிர, 100% இதனை எல்லாம் நிறைவேற்ற இயலாது.
நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 110 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடங்கப்படுமேயானால் அந்த மாணவர்கள் ஆறாம் வகுப்பிற்கு வரும்போது அந்தப் பாடப் புத்தகங்களுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்புமே இல்லாத நிலைமை உருவாகும்.
புத்தகமே இல்லாமல் பாடம் நடத்துவதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஊக்கம் தருவார்களேயானால் மாணவர்கள் கல்வி நலனில் அக்கறை உள்ளவர்களால் வேதனை படாமலும், வெளிப்படைத்தன்மையுடன் எடுத்துக் கூறாமலும் எவ்வாறு இருக்க முடியும்? எல்லோரும் சுயநிதி பள்ளிகளை வைத்து நடத்துகினர். நான்கு, ஐந்தாம் வகுப்பில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுமேயானால் சுயநிதி பள்ளிகளில் பெற்றோர்களே மாணவர்களை கொண்டு சேர்த்துவிடும் நிலைமை உருவாகும்.
ஐம்பதாயிரம் மாணவர்கள் 12 ம் வகுப்பு தமிழ்த் தேர்வு எழுதவில்லை. அதில் 46 ஆயிரம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதையும் நாம் மறந்து விட முடியாது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தினம் ஒரு அறிக்கையின் மூலம் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து வருகிறார். 15 பின்தங்கிய மாவட்டங்களில் 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனமின்றி காலிப் பணியிடங்களாக உள்ளன. அத்தகைய மாவட்டங்களில் கல்வி நலன் பெரிதும் பாழ்பட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்துவதை நிறுத்தி வைத்துவிட்டு அவர்களை நியமனம் செய்தால் மாணவர்களின் கல்வி நலனையும் பாதுகாக்க முடியும். அவர்களுக்கு வேலை வாய்ப்பினையும் அளிக்க முடியும். கல்வித்துறை சார்பாக கற்றல் கற்பித்தலில் அக்கறை காட்டுவதை தவிர்த்துக் கொண்டு, எதார்த்தம் இல்லாத விளம்பரத்தின் மூலமாக மாயத் தோற்றத்தினை உருவாக்கி வருவதை தமிழ்நாடு முதலமைச்சர் நெறிப்படுத்த வேண்டும்.
ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை இடம்பெறச் செய்ய வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.