தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் ஆடை வடிவமைப்பில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 250 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பரிசுகளை கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
இந்த விழாவில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசிய ஆடை நிறுவனம் தேசிய அளவிலான நிறுவனம். எனவே அனைத்து மாநிலங்களிலும் இருந்து வந்த மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழக மாணவர்களுக்கு அதிகப்படியான பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று வலியிறுத்தியுள்ளேன்.
இதில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு தேவையான பயிற்சியும், கல்வி உதவித்தொகையும் அளித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் கூடுதலாக மாணவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்தி தருவதற்கு குரல்கொடுப்பேன். பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகள் மூலம் சாதியை அடையாளப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதை பெற்றோர்களே விழிப்புணர்வுடன் இருந்து கவனிக்க வேண்டும். சாதி,மாத ரீதியிலான கருத்துகளை மாணவர்களிடம் புகுத்தாமல் இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.