கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்ட போதிலும், சர்வதேச விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா, கிா்கிஸ்தான், குவைத், துபாய் நாடுகளில் சிக்கித்தவித்த 627 தமிழர்கள் நான்கு சிறப்பு விமானங்களின் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் மூலம் 129 பேரும், கிர்கிஸ்தானிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் மூலம் 164 பேரும், குவைத்திலிருந்து தனியாா் சிறப்பு மீட்பு விமானம் மூலம் 153 பேரும், துபாயிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் மூலம் 181 பேரும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவா்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள், சுங்கப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.
இவர்கள் அரசு முகாம்களிலும், தனியார் விடுதிகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.