சித்திரை முதல் நாளான நேற்று (ஏப்ரல் 14) உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடினர். வீடுகளில் வழிபாடு செய்துவிட்டு, பொங்கல், பாயசம், வடை உள்ளிட்ட அறுசுவை உணவுகளைச் சமைத்து உண்டபின், கோயில்களுக்குச் செல்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் அதிகரிப்பால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
அதன்படி, சென்னையில் உள்ள பழைமைவாய்ந்த, பிரதான கோயில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வாசலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தகுந்த இடைவெளியைப் பின்பற்றி மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கோயில்களில் கயிறுகள் கட்டப்பட்டு மக்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டனர். கோயில்களில் அமர்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மலையாள மக்களின் புத்தாண்டான விஷு நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமானவர்கள் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 7, 819 பேருக்கு கரோனா!