சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜனவரி 26ஆம் தேதி மாலை 6.30 மணிமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து. இந்நிலையில், அரசு மற்றும் பொதுக்கட்டடங்கள், தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டன.
மேலும், விதிகளை மீறி போஸ்டர் ஒட்டும் கட்சி அல்லது வேட்பாளர்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நேற்று (பிப்.17) மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 2 ஆயிரத்து 86 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அந்த சுவரொட்டிகளை ஒட்டிய நபர்களிடமிருந்து ரூ. ஒரு லட்சத்து 68 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை பொது இடங்களில் 1, 831 சுவர் விளம்பரங்கள், 10 ஆயிரத்து 379 சுவரொட்டிகள், 104 பேனர்கள், 883 இதர விளம்பரங்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 197 விளம்பரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் 45 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் 1,677 சுவர் விளம்பரங்கள், 19 ஆயிரத்து 106 சுவரொட்டிகள், 525 பேனர்கள், 808 இதர விளம்பரங்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 116 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மாலை அணிவிக்க நெருங்கிய பாஜகவினர்: ராஜ்நாத்துக்கு அடுத்து நடந்தது என்ன தெரியுமா?