சென்னை: தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “இந்தியா தலைமையில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடக்கக்கூடிய ஜி-20 மாநாடு, ஒரு மிகப்பெரிய சரித்திரம் படைத்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி, உலக அளவில் முன்னிறுத்தக் கூடிய குறிக்கோள்கள் அனைத்தும் உலக மக்களுக்கு தெரியும்.
உலகம், நிறைய பிரச்சினைகள் இருக்கக்கூடிய உலகமாக இருக்கிறது. ஜி-20 அரங்கில், நாடுகளுக்குள் இருக்கக்கூடிய யுத்தங்கள் அனைத்தையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளாக ஜி-20 ஆக இருந்ததை, ஜி-21 ஆக பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார். குறிப்பாக அதிக மக்கள் தொகை இருக்கக்கூடிய இடம் ஆப்பிரிக்கா.
அதை ஜி-20 நாட்டிற்குள் நிரந்தர உறுப்பினராக கொண்டு வந்து ஜி-21 ஆக மாற்றி சாதனை படைத்துள்ளார். அதையும் தாண்டி கடந்த 9 ஆண்டுகளில், மோடி முன்னிறுத்தக் கூடிய விஷயங்களை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார். மேலும், ஜி-20 மாநாட்டில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கையின் மாற்றம், பழக்க வழக்கம், யோகா கலை, சாப்பிடும் முறை மாற்றம் ஆகியவற்றில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் என பிரதமர் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி, உலக அரங்கில் இந்தியா தலைமையில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நாடாக இந்தியாவை ஏற்படுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் இங்கிலாந்து அதிபர் போன்ற முக்கியமான தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். சீனா உலகின் தென்பகுதியில் தலையில் சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் உள்ள சிறிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றை தன் நாட்டிற்கு கீழ் கொண்டு வரும் நிலையை ஏற்படுத்தியது.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை வளரும் சிறிய நாடுகளுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தென் பிராந்தியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஓராண்டு காலமாக இந்தியாவின் ஜி-20, மக்களை முன்னிறுத்தி நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசு 220 கூட்டங்களை நடத்தியுள்ளது.
64 மாநகரத்தில் ஜி-20 மாநாடு நடைபெற்று உள்ளது. தமிழகத்தில், காஞ்சிபுரம், மகாபலிபுரம், சென்னை போன்ற எல்லா நகரங்களிலும் ஜி-20 மாநாடு நடைபெற்று உள்ளது. மற்ற நாடுகளில் ஜி-20 மாநாடு நடைபெறும் போது, அந்நாட்டின் தலைநகரில் நடைபெறும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்துள்ளார்கள். இதைப் பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார். எனவே இந்த ஜி-20 மாநாடு மக்களால் முன்னிறுத்தப்பட்ட மாநாடு என கூறியுள்ளார். ஜி-20க்கு நமது நாடு தலைமை ஏற்ற பொழுது, அதை மிகப்பெரிய அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.
நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் அரங்கில், தமிழகத்தின் நடராஜர் சிலை அங்கே கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த சிலை, சுவாமிமலையில் பல ஆண்டுகளாக சிலை வடிக்கும் குடும்பத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.
உலக அரங்கில் இந்தியா தான் மையப்புள்ளி என்பதை முன்னிறுத்தி உள்ளோம். சீனாவிற்கு மாற்றாக இந்தியா வளர்ச்சி அடைகின்ற நாடாகவும், வளராத நாடுகளுக்கு முன் உதாரணமாகவும் இந்தியா இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "அண்ணாவை பின்பற்றுகிறார் மோடி... உதயநிதியின் தலைக்கான விலை சரிதான்" - ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்!