இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த ஒரு சாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் நிர்ணயித்துள்ள முதன்மைக் கூறு, அந்த சாதி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கிறது என்பதை கணக்கிடக் கூடிய புள்ளி விவரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்பது தான். உள் ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாடு அரசு, கேரள அரசை பின்பற்ற வேண்டும்.
கேரளத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களில் ஏதேனும் ஒரு சமுதாயம் ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு பெற தகுதியுடையதாக இருந்தால், அந்த சாதிக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இட ஒதுக்கீடு பெறும் நிலையில் இருக்கும் சாதிகளை மட்டும் தான் தொகுப்பாக மாற்றி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கேரளத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மொத்தம் 77 சாதிகள் உள்ளன. அவர்களில் மேற்குறிப்பிடப்பட்ட சாதிகள் தவிர மற்ற சாதிகளின் மக்கள் தொகை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பதால் தான் அவர்களுக்கு 3 விழுக்காடு கொண்ட தொகுப்பாக வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் அந்த சாதிகளுக்கும் கூட குறைந்தபட்சம் ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும்.
கேரளத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு தொகுப்பாகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தனித்தனி சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்".
இவ்வாறு அதில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.