சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்திவாசிய பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடும் இலங்கை பகுதியில் நிலவி வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கைக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது. இதனடிப்படையில், ‘தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்’ என அச்சிடப்பட்ட மூட்டைகளில் அத்தியாசியப் பொருள்கள் பெறப்பட்டன.
இதற்கு குழந்தைகள் முதல் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே18) சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதில், இலங்கை வாழ் மக்களுக்கு முதற்கட்டமாக 30.1 கோடி மதிப்புள்ள 9000 டன் அரிசி, 8.85 கோடி மதிப்புள்ள 24 டன் மருந்துப் பொருள்கள், 6 கோடி மதிப்புள்ள 200 பால் பவுடர் ஆகிய அத்தியாவசிய பொருள்களை TAN BINH 99 என்ற சரக்குக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த முதற்கட்ட உதவிப் பொருள்களின் மொத்த மதிப்பு 45 கோடி ரூபாய் ஆகும். இதன் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் மாதிரித் தொகுப்பினை இலங்கை துணைத் தூதர் வெங்கடேசுவரனிடம் முதலமைச்சர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மின் நுகர்வு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைப்பு - பாமக அறிக்கைக்கு செந்தில் பாலாஜி பதில்