சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் 23ஆவது அனைந்திந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியின் தொடக்க விழா சென்னை வண்டலூரில் உள்ள கவாத்து மைதானத்தில் இன்று (ஜனவரி 9) தொடங்குகிறது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைக்கிறார். இப்போட்டியில், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுவார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டில் அதிகப்படியாக 40 காவலர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய குழுவினராக எல்லை பாதுகாப்பு படையினரும், இந்தோ திபெத் எல்லை காவல் படையை சேர்ந்த 38 காவலர்களும், ஓடிசா மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா 35 காவலர்களும், தமிழக காவல்துறையிலிருந்து 30 காவலர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப் படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் 09.01.2023 முதல் 13.012023 வரை நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 13.01.2023 அன்று மாலை 5 மணிக்கு எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிறைவு விழாவிற்கு தலைமை தாங்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.
மாநில காவல் துறையினருக்கு இடையிலான அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் கைத்துப்பாக்கி மற்றும் ரிவால்வர் மட்டுமே போட்டியில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அதுவே, முழு அளவிலான அகில இந்திய போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டியாக (AIPDM) நடத்தப்பட்டு வருகிறது. 1999ஆம் வருடம் முதல் சுழற்சி முறையில் மாநில காவல்துறை அல்லது மத்திய போலீஸ் அமைப்புகளால் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ‘சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்’ - தமிழ்நாடு டிஜிபி