சென்னை: அயனாவரம் அருகே உள்ள நம்மாழ்வார்பேட்டையில் கடந்த 2015-ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்திய உணவு கழகத்தில் பணி செய்த 22 வயது அருணா சீனிவாசன் என்ற அப்பெண் சூளையில் வசித்து வந்தார். அருணாவை கொலை செய்தது அம்பத்தூர் பகுதியில் உள்ள BPO நிறுவனம் ஒன்றில் பணி செய்த பொறியாளர் தினேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டார்.
அடுக்குமாடி வீடு ஒன்றில் 2-ஆவது தளத்தில் தினேஷ்குமார் குடும்பத்தினர் வசித்தனர். அவரது தந்தை சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனவே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றுவிட்ட நேரத்தில் தினேஷ்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் அருணாவை தொடர்பு கொண்டு தமது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.
அதன்படி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள தினேஷ் வீட்டுக்கு அருணா சென்றுள்ளார். அங்கு இருவரும் மாலை வரை ஒன்றாக இருந்து உள்ளனர். அப்போது அருணா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அருணாவை கொலை செய்த பின்பு சடலத்தை சேலை மற்றும் படுக்கையில் சுருட்டி லிப்ட் மூலமாக கீழ்தளத்துக்கு எடுத்து வந்து காரில் ஏற்ற முயன்று உள்ளார் தினேஷ். வீடு சம்பந்தப்பட்ட பொருளை தனி ஆளாக காரில் ஏற்ற தினேஷ் சிரமப்படுவதாக கருதிய பக்கத்து வீடடுக்காரர் ஒருவர் அவருக்கு உதவி உள்ளார்.
பின்னர், சடலம் ஏற்றப்பட்ட காரை காம்பவுண்டுக்கு வெளியே தினேஷால் ஓட்டிச்செல்ல முடிவில்லை. காரணம் அந்த பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் திருவிழா நடைபெற்றதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அதனால் பயந்து போன தினேஷ் காரை அப்படியே நிறுத்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இரண்டு மணி நேரம் கழித்து அங்கு வந்த காவலாளி மற்றும் குடியிருப்புவாசிகள் காரின் பின் இருக்கையை சோதித்தபோது, கொலையான பெண்ணின் சடலம் சுருட்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அது குறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தினேஷை தேடினர். ஆனால் அவர் இதுவரை பிடிபடவில்லை. எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தினேஷ் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக போலீசார் உறுதியாக நம்புகின்றனர்.
எனவே கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தினேஷ்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: வடமாநில கோயில்களுக்கு ஹெலிகாப்டர் சேவை எனக் கூறி மோசடி - பக்தர்களுக்கு எச்சரிக்கை!