சென்னை: தமிழ்நாடு காவல்துறையினர் கரோனா, தேர்தல் பணிகள் என தொடர்ந்து ஓய்வில்லாமல் பணியில் ஈடுபட்டு வந்ததால், பணிச்சுமையினால் மன உளைச்சல் ஏற்பட்டு பலியான சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக கடந்த 8 மாதங்களில் மட்டும் வெவ்வேறு காரணங்களினால் 297 காவலர்கள் பலியாகினர்.
இதனால் காவலர்களின் பணிச்சுமையை போக்கும் வகையில் அனைத்து காவலர்களுக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் ”உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை கேட்டறியும் காவலர் குறைதீர்ப்பு முகாம் நடத்த அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “வருகிற 30ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், அக்டோபர் 15ஆம் தேதி காவல்துறை தலைவர் தலைமையிலும் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் முகாம் மூலம் தீர்க்கப்படாத காவலர்களின் குறைகளை மனுவாக காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தீர்க்கப்படாத குறைகளை காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் அடுத்த மாதம் 30ஆம் தேதி நடைபெறும் முகாமின் போது தீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் தீர்க்கப்பட்ட மனுக்கள் குறித்தான விவரங்களை அக்டோபர் 1, 16 ஆகிய தேதிகளில் தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் “ என சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : டிஜிபி உத்தரவு எதிரொலி: மதுரையில் ரவுடிகள் மீது தொடரும் நடவடிக்கை