சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பால் வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அதேபோல் தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்முறையாக டி.ஆர்.பி ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி ராஜா வரும் 11ஆம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டது. அதேநேரம் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
இருப்பினும், இது தொடர்பான தகவல்கள் காற்றுவாக்கிலேயே இருந்தது. இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து இதுதொடர்பாக பேச இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதை அமைச்சர் துரைமுருகன் மறுத்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பால் வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்குப் பதிலாக மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு வரும் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் அரங்கில் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்ற பிறகு, இலாகா மாற்றம் குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் அடுத்தடுத்து பெரிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : கேரளாவில் மீண்டும் செல்போன் விபத்து - ரியல்மி செல்போன் பேட்டரி வெடித்து இளைஞர் காயம்!