சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தின் விற்பனைக் கூடம் மற்றும் இ-காமர்ஸ் இணையதளத்தைச் சிறு குறு மற்றும் நடுத்தர துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன (TANSI) தலைமை அலுவலகத்தில் காட்சியக விற்பனை கூட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், டான்சி நிறுவனத்தால் புதியதாக நிறுவப்பட்ட காட்சியக விற்பனை கூடம் மற்றும் மின் வணிக இணைய முகப்பைத் துவக்கி வைத்தார்.
கடந்த 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் டான்சி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைச் சந்தைப்படுத்த பிரத்யேக காட்சியகம் (Showroom cum Sales Centre) மற்றும் மின் வணிக இணைய முகப்பு (e-Commerce Online Portal) ஆகியன 3 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்தார்.
இந்நிலையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் டான்சி தயாரிப்புகளைப் பார்வையிட்டு வாங்கி செல்ல தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
டான்சி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாகக் குறிப்பாக 2021-22ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் இலக்கை தாண்டி 114 கோடியே 5 லட்ச ரூபாய் மதிப்பில் அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆணைகள் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு 2022-23-ல், ஜனவரி மாதம் வரையில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஆணைகளைப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டான்சி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் (2022-23) இதுவரை 125 கோடி ரூபாய் மதிப்பிற்கு தன்னுடைய அலகுகளில் உற்பத்தி செய்துள்ளது என்றும் அரசு இ-விற்பனை முகமையில் (GEM PORTAL) பதிவு செய்து கொள்முதல் மற்றும் விற்பனை சேவைகளைத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் "நம்ம School" என்ற திட்டத்திற்கு டான்சி நிறுவனம் நன்கொடையாக 4 கோடி ரூபாய் அளித்துள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியின் போது டான்சியில் பணியிலிருந்த போது உயிர் நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மூன்று பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இதையும் படிங்க: ஆண் பாலியல் தொழில் ஆசை.. 4 ஆயிரம் பேரிடம் கைவரிசை; பலே கும்பல் சிக்கியது எப்படி?