திருப்பத்தூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திரத்தில் பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
விசாரணையில் கே.சி.வீரமணி பிரமாணப் பத்திரத்தில் சொத்துக்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் மீது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ (Section 125A) பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக வந்தது.
இதற்காக நேரில் வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலட்சுமி முன்பு இன்று ஆஜரானார்.
வழக்கு கடந்து வந்த பாதை
ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும், கே.சி வீரமணி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தது.
விசாரணையில் கே.சி.வீரமணி பிரமாணப் பத்திரத்தில் சொத்துக்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.