சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(ஜன.2) வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(ஜன.3) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன.4 முதல் 6 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை "அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: க.அன்பழகன் சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ்!