சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அரசிற்கும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் மன நல்லுறவனை சிதைக்கும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினை காத்து 69 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து சமூக நீதியினை காத்திட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்ட குரூப்-4(Group 4) தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கவனயீர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த நிதி மற்றும் மனித மேலாண்மை துறை அமைச்சர், அந்த அரசாணை வரும் பொழுது பலர் எதிர்த்தார்கள் அரசியல் வேலை செய்கின்ற தற்காலிக பணியாளர்களுக்கு எல்லாம் ஒரு குறைந்த ஊதியம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம் சில பேர் தற்காலிகமாக இருந்து கொண்டு 5000, 8000, 10,000 எல்லாம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் முழு நேர பணியாளர்கள் பல லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள் இது நியாயம் அல்ல அதனால் அடிப்படை அவுட்டோர் சிங் முறையில் இவர்களை எல்லாம் ஈபிஎப், இஎஸ்ஐ சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசாணையை கொண்டு வந்தோம் அதனை எதிர்த்தார்கள் எனவும் சமூக நீதி நிலைநாட்ட இந்த அரசாணிக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
நிதி அமைச்சரின் பதிலறையில் குறிப்பிட்டுள்ள அரசாணை என்பது அரசாணை எண் 115 மனிதவளத்துறை 2022 அக்டோபர் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையானது அரசு பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக ஒரு வல்லுநர் குழு அமைத்து அதற்கான ஆய்வு வரம்புகளை குறிப்பிட்டது. பன்முக வேலை திறனோடு பணியாளர்களின் ஆட் சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவை அமைய வேண்டும். அரசின் பல்வேறு நிலை பணியிடங்கள் பதவிகள் பணிகள் ஆகியவை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது, பரந்துபட்ட முறையில் பிரிவு டி மற்றும் சி பிரிவு பணியிடங்களை மூன்றாவது முகமை அதாவது வெளி முகமை ஆட்சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு பல்வேறு நிலை மனித வள அரசு பணியிடங்களை அவற்றைக் கொண்டு நிரப்புவதற்கான சாட்திய கூறுகளை ஆராய்வது, அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பணியிடங்களின் வேலைத்திறன் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்தல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் பணி செயல்பாடுகளை ஆய்வு செய்து அதன் பிறகு அவர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது என்று கூறியுள்ளார்.
இந்த ஆய்வு வரம்புகள் என்பது தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரானதாகவும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை தகர்க்கும் விதமாகவும் இருந்ததால் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தமிழ்நாடு அமைச்சருக்கு இந்த அரசாணையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. முதலமைச்சர் அரசாணை 115 கீழ் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவிற்கான ஆய்வு வரம்புகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
முதலமைச்சர் ரத்து செய்து உத்தரவிட்ட அரசாணையை மீண்டும் குறிப்பிட்டு அது சரியான ஆய்வு வரம்புகளோடு வெளியிடப்பட்டது தான் என்கிற தொனியில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சட்டமன்றத்திலேயே பேசி இருப்பது என்பது உள்ளபடியே மனித வள மேலாண்மை துறை என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் யார் இருந்தாலும் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்திய அரசியல் சாசனத்தில் பாதுகாப்பு பெற்று நடைமுறைக்கு கொண்டு வந்து சமூகநீதியானது பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சரின் கூற்று என்பது முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது. இந்திய நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடலுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. வெளி முகமை மூலமாக பணியாளர்களை பணி அமர்த்தும் போது அந்த விதிமுறைகள் 69 சதவீத இட ஒதுக்கீட்டினை எந்த வகையில் நடைமுறைப்படுத்தும்.
முழு நேர பணியாளர்கள் பல லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள் என்று குறிப்பிட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான தனது வெறுப்பினை வெளிக்காட்டி உள்ளார். மேலும் சட்டப்பேரவையிலேயே அரசிற்கும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்குமான நல்லுறவினை சிதைக்கும் வகையில் பேசி உள்ளார். முழு நேர பணியாளர்களாக தமிழக அரசு பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் யாரும் எந்த நபரின் சிபாரிசுகளின் மூலமாக வேறு ஏதாவது குறுக்கு வழியில் அரசு பணிக்கு வந்தவர்கள் அல்ல. சில ஆயிரம் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் பல லட்சம் பேர் கலந்து கொண்டு அதில் தேர்வாகி அரசு பணிக்கு வந்தவர்கள்.
அரசு பணியாளர்கள் பணியில் சேரும்போது யாரும் பல லட்சம் ரூபாயில் வாங்குவதில்லை 25 ஆண்டுகள் கடந்து பின்னர் தான் அதிலும் பதவி உயர்வு கிடைக்கும் பொழுது தான் 12 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களில் சில ஆயிரம் பணியாளர்கள் தான் லட்சம் என்ற மாதாந்திர சம்பளத்தினை அடைந்துள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் தகுதி பெற்றவர்களை தற்காலிக பணியாளர்களோடு ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?. திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு பணியில் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதிக்கு மாறாக அவற்றை தனியார் முகமை மூலம் நிரப்புவது தான் நிதி அமைச்சரின் நோக்கமா?. அதற்காகத்தான் ரத்து செய்யப்பட்ட அரசாணை 115 ஆய்வு வரம்புகளை மீண்டும் கொண்டுவர அமைச்சர் முயற்சிக்கிறாரா?.
தற்பொழுது பணியில் உள்ள பணியாளர்களை முழு நேர பணியாளர்கள் என குறிப்பிடுவதன் மூலம் வரும் காலத்தில் எந்த ஒரு பணியிடத்திலும் நிரந்தர பணியிடமாக கொள்ளாமல் அத்தக்கூலியாக பணி பாதுகாப்பு என்பதே இல்லாமல் குறைந்த ஊதியத்தில் கார்ப்பரேட் மாடலில் செயல்படுத்த முழு முயற்சி செய்து கொண்டுள்ளதை வெளிப்படையாகவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதன் வெளிப்பாடு தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுக்கான திட்டத்தில் 2000-த்துக்கு குறைவான பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டமிடல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் திட்டமிடுகின்றது திராவிட மாடலுக்குள்ளான கார்ப்பரேட் மாடலோ?
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று தவணை அகவிலைப்படி எப்படி ஆறு மாத காலம் கடந்த நிலுவை தொகையினை மறுத்து வழங்கிய பிறகும் நிதி அமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வன்மான முறையில் ஒரு விழுக்காட்டிற்கு கீழ் குறைவான பணியாளர்கள் பெரும் லட்ச ரூபாய் மாத சம்பளத்தை பெரிதாக்கி ஏதோ அனைத்து பணியாளர்களும் சக போகிகளாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை போல் உருவகப்படுத்துகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காற்று 69 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அடிப்படை பணியாளர் நியமனம் செய்து சமூக நீதியினை காத்திட வேண்டும்" எனவும் அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:Group 4 Cut Off: குரூப் - 4 தேர்வு: எந்தெந்த ரேங்க் வரை பணி கிடைக்க வாய்ப்பு?