சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் "ஒரே பாரதம் உன்னத பாரதம் - யுவ சங்கமம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாரத் தர்ஷன் சுற்றுலாவுக்காக சென்னை வந்த திரிபுரா மாநிலம் அகர்தலா உள்ள தேசிய தொழில்நுட்ப மைய மாணவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது அவர், "2047ஆம் ஆண்டுக்குள் உலக தலைவராக இந்தியா வருவதற்கான உறுதியான நிலையை அமிர்த காலத்தின் பொற்காலத்தில் எட்டவும் பாரதத்தின் மறுமலர்ச்சிக்கு "ஒரே பாரதம், உன்னத பாரதத்தை" என்ற உறுதியான கோட்டுபாடு அவசியமான ஒன்றாகும்.
இந்தியா, ரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகிகளால் உருவாக்கப்பட்ட கலாசார மற்றும் நாகரிக பரிணாம வளர்ச்சி கொண்டது. மாமல்லபுரத்தின் பல்லவ மன்னன், அறிவைத் தேடி நாலந்தாவுக்குச் சென்று போதி தர்மனாக மாறி, பவுத்த மதத்தை சீனாவுக்குக் கொண்டு சென்றார். அங்கே ஷாலின் மடங்களை நிறுவிய அவர், குங் ஃபூவை சீனாவிற்கு அறிமுகப்படுத்தினார்.
சிட்டகாங் பகுதி அக்காலத்தில் பவுத்த ஆய்வு மையமாக திகழ்ந்தது. ராமேஸ்வரம் வந்த அசாம் மகரிஷி சங்கர் தேவ் அங்கிருந்து காசி சென்று பல சத்திரங்களை நிறுவினார். சமுதாயம் ஒன்றாக இருந்ததால், மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் இந்த பெரிய நிலத்தை கடந்து சென்றனர்.
பாரதத்தின் வரலாறு பரிணாம வளர்ச்சியில் மகத்தான பங்காற்றிய மாபெரும் ஞானிகளால் நிறைந்தது. இந்தியா காலனித்துவப்படுத்தப்படுவதற்கு முன்பு இரும்பு, பருத்தி மற்றும் தோல் உற்பத்தியில் முன்னணியில் இருந்தது. அவை பாரதத்தை உன்னதம் ஆக்கின.
ஒரே பாரதத்தின் உணர்வையும், ஆன்மாவையும் பிரதிபலிக்கும் சமூக ஆதரவுடன் செயல்பட்ட அறநிலைய மானியங்கள் அந்த நிலத்தில் வாழும் சமூகத்தால் பராமரிக்கப்பட்டன. நமது பண்டிகைகள் (சங்கராந்தி, பொங்கல், பிஹு, லோஹ்ரி போன்றவை), நடனங்கள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதைகள் அனைத்தும் இந்த ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன.
கன்னியாகுமரியாக இருந்தாலும் சரி, காம்ரூப் ஆக இருந்தாலும் சரி, பூமி அன்னைக்கு மக்கள் மரியாதை செய்யும் வழக்கத்தை ஒரே மாதிரியாகவே கொண்டிருந்தார்கள். ஒரு மரத்தில் இரண்டு இலைகள் ஒரே மாதிரி இருக்காது. ஒரு மரத்தை அதன் இலைகள் வழியாகப் பார்த்தால், வேறுபாடுகள் மட்டுமே தோன்றும், ஆனால் மரத்தை ஒரு இயற்கை மூலமாகப் பார்த்தால், புற அளவில் தோன்றும் வேறுபாடுகளின் அளவு குறையும்.
உலகளாவிய ஒருமைப்பாட்டின் நமது சனாதன அத்யதம் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருட்களையும் உள்ளடக்கியது. நமது புற வேறுபாடுகளுடன், நாம் ஒற்றுமையாக இணைக்கப்பட்டுள்ளோம். ஆனால் அத்தகைய கண்ணோட்டம் மேற்கு நாடுகளில் இல்லை. அங்கே ராஜ்ஜியங்கள் வலுவான அரசர்களால் உருவாக்கப்பட்டன. அவர்கள் பிரதேசங்களை கைப்பற்றி இணைத்து பேரரசுகளை ஒருங்கிணைத்தனர்.
1757ஆம் ஆண்டு பெங்காலை கைப்பற்றிய பிறகு பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் இந்தப் பெரிய நிலத்தை துண்டு துண்டாக்கத் தொடங்கினர். 'இன்னர் லைன் பெர்மிட்' போன்ற விதிகள் மூலம் இந்தியாவின் வட கிழக்கை பாரதத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அவர்கள் துண்டித்தனர். தவறான கதைகளை புனைந்து, அவர்கள் மக்களை பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தினர்.
அது நம் மக்களை உள்நாட்டிலேயே அந்நியர்களாக ஆக்கியது. பாதிரியார் கிளார்க் போன்ற மிஷனரிகள் நற்செய்தியை ஊக்குவிக்கவும், காலனித்துவ ஆட்சியை நிலை நிறுத்தவும் வந்தாலும் அவர்கள் ஒரு முழுமையான கலாசார மற்றும் நாகரிக தொடர்பை ஏற்படுத்தவில்லை. வடக்கு கிழக்கை மேலும் துண்டாடினர். மாறுபாடுகளை வேறுபாடுகளாக காட்ட மானுடவியல் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது.
நமது அரசியலமைப்பு விதி 1 கூட பாரதம் என்றே இந்தியாவை அறிமுகப்படுத்துகிறது. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் நாம் தவறுகளை திருத்தவில்லை. இந்தப் பெரிய நிலத்தை புவியியல் ரீதியாகவும், நமது பன்முகத்தன்மையை வேறுபாடுகளாகவும் தொடர்ந்து பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக, அரசியல் எல்லைகள், கலாசார தொடர்ச்சியை மோசமாக பாதித்தன.
இன்று, ஒரு பிராந்தியத்தின் கலாசாரம் மாநிலத்தின் கலாசாரமாக மாறியுள்ளது. இது பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் தன்மை, அரசியல் எல்லைகள் நிர்வாக நோக்கங்களுக்காக மட்டுமே. பாரதம் மாநிலங்களை விட மிகவும் முன்னதாக வந்தது.
இதன் விளைவாக, மாநிலங்களுக்குள்ளும் கூட பல மோதல்கள் தோன்றின. நாம் நமது பன்முகத்தன்மையை வேறுபாடுகளாகப் பார்த்தோம். நமது தேசம் இயற்கையாகவே அமைந்த ஒருமையாகும். இது ஒப்பந்த அடிப்படையிலான அமெரிக்காவின் கூட்டாட்சி முறையைப் போல் கிடையாது. நமது மாநிலங்கள் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவை, ஆனால் அதன் அடிநாதத்தில் பாரதம் மற்றும் அதன் ஆன்மா புதைந்து கிடக்கிறது.
பிரதமர் மோடியின் கண்ணோட்டத்தில் நமது மக்களையும் நிலத்தையும் காண்கிறார். இன்று, நம் நாட்டைப் பற்றிய நமது பார்வை மாறிவிட்டது. இந்த நிலத்தை ஒரே குடும்பம் ஆக பார்க்கிறோம். எல்லோரும் அதில் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினராகவும் அவர்கள் ஒவ்வொருவரின் பிரச்சனையை முழு குடும்பத்தின் பிரச்சனையாகவும் கருதுகிறோம்.
இன்று, பிரச்சனைகளுக்கு விரிவான வகையில் தீர்வு காணப்படுகிறது. கல்வி, சுகாதார வசதிகள், உள்கட்டமைப்பு, குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைகின்றன. அந்த செல்பாடுகள் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.
அனைவரும் வளரும் போது தான் நமது தேசம் வளரும். நம் தேசம் அமிர்த கால கட்டத்தில் உள்ளது. இந்த தேசத்தை தகுதியான இடத்திற்கு கொண்டு செல்லும் கடமை அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது. நம் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்கும் போதுதான் உன்னத பாரதத்தை அடைய முடியும்.
இளைஞர்கள் சவால்களை துணிந்து எதிர்கொண்டு தோல்வியைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். தோல்வி என்பது நமது கற்றலின் ஒரு பகுதி. நமது தோல்விகளால் நாம் தோற்கடிக்கப்படும் வரை அந்த தோல்வியே இறுதியானது அல்ல" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் அர்ஷிந்தர் கவுர், பேராசிரியர் ரத்ன குமார் அன்னபத்துலா, என்ஐடி அகர்தலா மற்றும் சென்னை ஐஐடி நிறுவனங்களின் அதிகாரிகள், மாணவர்கள், மற்றும் ராஜ்பவன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம் பிரிவு அறிமுகம் - ஜெஇஇ தேர்வு எழுதத் தேவையில்லை!