சென்னை: அன்னையர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈரோடு மகேஷின் அன்னையின் அன்பு செயலால் தமிழ்நாடு ஆளுநர் ரவி, அவரது மனைவி லட்சுமி மேடையிலேயே சிரித்து மகிழ்ந்தனர். சர்வதேச அன்னையர் தினம் (Mothers Day 2023) சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று (மே 14) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் மனைவி லட்சுமி ரவி பங்கேற்று செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் ஈரோடு மகேஷ், பாரா ஒலிம்பிக் வீரர் பொன்ராஜ், மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் சுஜித்குமார், இளம் வயது அரசியல் தலைவர் சசிகுமார் உள்ளிட்டோரின் தாயாருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவருடைய மனைவி விருதுகளை வழங்கினர்.
நடிகர் ஈரோடு மகேஷ், தனது தாய் மீனாட்சி சந்திரசேகரனுடன் வந்து விருதுகளைப் பெற வந்தார். அப்போது மேடைக்கு வந்தபோது, கைகளைக் கூப்பி வணங்கி விருதுகளைப் பெற்றார். இதனைத்தொடர்ந்து, ஈரோடு மகேஷை பேச அழைத்தனர். ஆனால், அவரின் தாய் மீனாட்சி தான் பேசுவதாகக் கூறி பேசினார். அப்போது பேசிய அவர், 'என்னை மகேஷ் பாதுகாத்துக் கொள்வதால், காது கேட்காத குறையே எனக்குத் தெரியவில்லை. ஒரு குழந்தையை நல்ல முறையில் வளர்க்கும் போது பெற்றோர்களுக்கு பெருமை இருக்கும்.
ஆளுநர் கையால் விருது பெற்றது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. காது கேட்கவில்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறுகுறைகள் இல்லை' எனப் பேசினார்.
'தான் எல்லோரையும் போல் நன்றாகத்தான் இருந்தேன். குறிப்பிட்ட வயதிற்கு பின்னர்தான் காது கேட்காமல் போய்விட்டது’ எனத் தொடர்ந்து பேசியபோது, நடுவே ஈரோடு மகேஷ் தனது தாயின் தாடையை பிடித்து கிள்ளி முத்தம் கொடுத்து அவரது பேச்சை நிறுத்தினார். அப்போது ஆளுநர் அவரை கட்டித் தழுவி ஆறுதல் தெரிவித்தார். அவரது மனைவி லட்சுமியும் ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஈரோடு மகேஷ், 'அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். ஆளுநரை அன்பால் ஆளுகிற அவரின் மனைவிக்கும் எனது வணக்கம். இந்த இடம் எனது அன்னைக்குரியது. '10 அன்னைக்கு விருது' கொடுக்கப்படுகிறது. அந்த விருது அனைத்து அன்னைக்குமானது. ஆளுநர் வருவதற்கான கதவைத் திறந்தபோது, ஏன்? எனக் கேட்டார், எனது தாய். ஆளுநர் வருகிறார் எனக் கூறினேன். அப்போது ஆளுநரே வருகிறாரா?' எனக் கேட்டார்.
'நான் மேடையில் இந்தளவிற்கு பேசுவதற்கு காரணம், எனது தாய் தான். அதனால்தான், தாய் மாெழி எனக் கூறுகிறார்களோ? என்னைப் பற்றி, எந்த செய்தி வந்தாலும் அதனையடுத்து எனது அப்பாவிடம் கொடுத்துவிடுவார். அதனை அப்பா பைண்டிங் செய்து எனக்குத் தருவார். எல்லா அம்மாக்களின் ஞாபக சக்திக்கு இணையான கம்ப்யூட்டர் எதுவும் இதுவரை வரவில்லை. அந்தளவிற்கு ஞாபகம் வைத்திருப்பார்' எனவும், தனது வாழ்க்கையின் சில நினைவுகளைக் கூறினார். இதனைத்தொடர்ந்து பேசி முடித்துவிட்டு செல்ல முயன்ற போது, அவரின் தாய் மீண்டும் நன்றி தெரிவித்து கை கூப்பி வணங்கினார்.
ஆனால், மீண்டும் அவரின் தாய் ஆளுநருக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டார். அப்போது மகேஷ் தன் தாயை கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். இதனைக் கண்ட ஆளுநரும், அவரின் மனைவியும் மேடையிலேயே சிரித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பேசிய ஈரோடு மகேஷ், 'தமிழ்நாடு ஆளுநர் விருதுபெற்றவர்களின் பெயர்களை குறிப்புகள் எதுவும் இல்லாமல் தெரிவித்தபோது, தான் பயந்துக் கொண்டு இருந்தேன். ஆனால் யார் பெயரைவும் விட்டுவிடாமல் கூறினார்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Ooty Rose exhibition: கண்களைக் கவர்ந்த கருப்பு ரோஜா; உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!