சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி மையத்தில் 14ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இதில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், நிதி துறை கூடுதல் செயலாளர் அருன் சுந்தர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகளும், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட 66 தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே ஐந்து கட்ட பேச்சு வார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் இன்று ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊதிய உயர்வு, காலி பணியிடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர்.
இதையடுத்து 7 மணி நேர பேச்சுவார்த்தை பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கடந்த பேச்சு வார்த்தையின் போது அவர்கள் முன் வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட சூழலிலும் மேலும் ஒரு முக்கிய கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி இருந்தார்கள்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் உடைய ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. சீனியர் ஜூனியர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஒரே விகித சம்பளம் கொண்டுவரப்பட்டது. அது களையப்பட வேண்டும். எனவே பே மேட்ரிக்ஸ் முறை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள்.
அந்த பேச்சுவார்த்தை கடந்த முறை நிறைவேறாமல் நின்றுபோனது. தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று அவருடைய அறிவுரையை பெற்றோம். இதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியதை அடுத்து போக்குவரத்து ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸ் தருவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பே மேட்ரிக்ஸ் தருவதில் எந்த காலகட்டத்தில் இருந்து தருவது அதை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை எட்டப்படவில்லை. காரணம் தொழிற்சங்கங்கள் வைக்கின்ற கோரிக்கைகளால் கூடுதல் நிதிசுமை ஏற்படுவதை நிதி துறையின் ஒப்புதல் பெற்று தான் மீண்டும் ஒப்புதல் அளிக்கக்கூடிய சூழல் இருப்பதால், இன்றைக்கு இந்த ஒப்பந்தம் நிறைவு செய்யப்படவில்லை.
ஆனாலும் அவர்கள் வைத்திருக்கின்ற பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே இன்னொரு முறை நிதித்துறை உடன் இது குறித்து கலந்துரையாடி முழுமை செய்யப்பட்டு, இந்த பேச்சுவார்த்தை மீண்டும் நாள் அறிவிக்கப்பட்டு நடைபெறும். குறிப்பாக மகளிர் பேருந்துகளில் பணியாற்றுகிற நடத்துனர், ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி உயர்வு உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நான்காண்டுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்தும் தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் எவை களையப்பட்டதோ அவை மீண்டும் கொண்டுவரப்படும். பே மேட்ரிக்ஸ் என்பது அவர்களுடைய சம்பள விகிதத்தில் இருந்த குளறுபடியை நீக்கி கடந்த காலத்தில் இருந்தது போல மீண்டும் கொண்டு வரப்படும். அதனை எந்த தேதியில் கொண்டு வருவது எந்த தேதியில் சம்பளம் உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கு பல்வேறு விதத்தில் உதவி வருவதால்தான் மக்களுக்கு இந்த துறை மிகச் சிறப்பான முறையில் சேவையாற்ற முடிகிறது. குறிப்பாக டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தாமல் இன்று இந்த துறை செயல்பட்டு கொண்டிருப்பதற்கு காரணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கு தருகிற நிதியின் காரணத்தினால் தான்.
தமிழ்நாடு மக்களுக்கு சுமை வந்து சேரக்கூடாது என்பதற்காக பேருந்து கட்டணங்களை உயர்த்த கூடாது என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். போக்குவரத்து துறையில் இலவச சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் நிதி வழங்கி வருகிறார். இதனால் போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. எனவே மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சேவைகள் தொடர்ந்து செயல்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் - மெட்ரோ ரயில்வே இயக்குநர் தகவல்!