சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு மருத்துவக் கல்வியையும், மருத்துவச் சேவையையும் இந்துத்துவமயமாக்கும் காவி மயமாக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது. அதைச் செய்வதற்காக மருத்துவக் கல்வியிலும், மருத்துவத் துறையிலும் 'இந்துத்துவா' கருத்துக்களை திணித்து வருகிறது. நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை மூர்க்கத்தனமாக மேற்கொள்கிறது. மருத்துவத்தில் மூட நம்பிக்கைகளையும், அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும் திணிக்கிறது.
’இந்து இந்தியா’
'இந்தியா என்பது இந்து நாடு, அதன் கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம். இந்துக் கலாச்சாரத்தின் மருத்துவ முறை ஆயுர்வேதா’ என்ற அடிப்படையில் ஆயுர்வேத மருத்துவத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு செய்கிறது. ஆனால், உண்மையில் ஆயுர்வேதாவிற்கும் இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆனால், இப்பொழுது தனது `இந்துத்துவா' என்ற மதவெறி அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஆயுர்வேதாவை இந்து மருத்துவ முறையாக, இந்து மதத்தின் பண்பாட்டுக் கூறாக மாற்ற மோடி அரசு முயல்கிறது. ஒன்றிய பாஜக அரசு ஆயுர்வேதாவை ஊக்கப்படுத்துவதாக கூறிக்கொண்டு, அறிவியலுக்குப் புறம்பான போலி அறிவியலையும், மூட நம்பிக்கைகளையுமே ஊக்கப்படுத்துகிறது.
ஒரே தேசம், ஒரே மருத்துவமுறை
மருத்துவத்தை, மருத்துவக் கல்வியை இந்துத்துவ மயமாக்கும் நோக்குடன்தான் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை 2020, தேசிய நலக் கொள்கை 2017 போன்றவற்றை நடைமுறைப்படுத்துகிறது. 'ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது. நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராக செயல்படும் பாபா ராம் தேவ் போன்ற பெருநிறுவன சாமியார்களுக்கு துணை நிற்கிறது. அவர்களது நிரூபணமாகாத மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஊக்கப்படுத்துகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவச் சங்கம் நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் போக்கையும், மிக்ஸோபதியையும் (Mixopathy) எதிர்த்து வருகிறது. நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான பாபா ராம்தேவின் கருத்துக்களையும் எதிர்த்துப் போராடி வருகிறது. இத்தகையச் சூழலில், இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசியத் தலைவராக டாக்டர் ஜெயலால் பதவி வகித்து வருகிறார். அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதோடு, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இந்திய மருத்துவச் சங்கத்தின் போராட்டத்தை, மத அடிப்படையில் உள் நோக்கம் கற்பிக்கும் முயற்சியில் சங் பரிவார அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இது கடும் கண்டனத்திற்குரியது.
மருத்துவர் ஜெயலாலுக்கு எதிராக காவிப்படை
டாக்டர் ஜெயலாலுக்கு சங் பரிவார அமைப்புகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு எதிராக பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய மருத்துவச் சங்கம் என்பது ஒரு மதச்சார்பற்ற அமைப்பாகும். அதற்கு எந்த சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தலைவராக வரலாம், வர உரிமை உண்டு.
நீண்ட காலம் குஜராத் உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த முன்னேறிய வகுப்பினர்தான் இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர். தென்னிந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர். ஒரு தமிழர், அதுவும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக வந்திருப்பது வரலாற்றுச் சாதனையாகும். இதை சங்பரிவார அமைப்புகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை, டாக்டர் ஜெயலால் கடுமையாக எதிர்த்து வருகிறார். டாக்டர் ஜெயலாலுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
டாக்டர் ஜெயலாலின் உயிருக்கு, சங் பரிவார் அமைப்புகளாலும், பாபா ராம் தேவ் போன்றோராலும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மதச்சார்பற்ற கொள்கையில் உறுதி கொண்ட, கல்வி, மருத்துவம் ஆகியவை காவிமயமாக்கப்படுவதற்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு அரசு டாக்டர் ஜெயலாலுக்கு காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்கிட வேண்டும் .
மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும் காவிமயமாக்கும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்போருக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சுப்பராயன் எம்.பி. ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? மருத்துவ சங்கத்தை கண்டித்த மருத்துவர்