சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் கருத்தில் கொண்டு பரிசீலனை செய்யவில்லை எனவும், மாநில கல்விக் கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழு உறுப்பினரும், முன்னாள் துணைவேந்தருமான ஜவகர் நேசன் தெரிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஜவகர் நேசன் உள்ளிட்டோர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி, பதிவாளார் ஏழுமலை உள்ளிட்டவர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாநிலக் கல்விக்குழு உறுப்பினர் ஜவகர் நேசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தமிழ்நாடு மாநிலக் கல்விக்காெள்கை உருவாக்கும் குழு ஏற்கனவே பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 5 பல்கலைக்கழகங்கள், 15 கல்லூரிகளில் கல்விக் கொள்கை உருவாக்குவது குறித்து கருத்துக் கேட்க முடிவு செய்தோம்.
சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், 15 கல்லூரிகளிலும் தேசியக் கல்விக்கொள்யை உருவாக்குவது குறித்து கருத்துக் கேட்க உள்ளோம்.
தமிழ்நாட்டிற்கான தனிக் கல்விக்கொள்ளையை உருவாக்குவதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தனித்துவமான கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை பரிசீலனை செய்யவில்லை. தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி உருவாக்கப்பட்டு வரும் மாநில கல்விக்கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த கருத்துக்கேட்பு அறிக்கை வரும் ஜூன் மாதத்திற்குள் உருவாக்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்பாகவோ அல்லது காலதாமதம் ஆகும் பட்சத்தில் தமிழ்நாடு அரசிடம் கூடுதல் கால அவகாசம் கேட்கப்படும் .
தேசியக் கல்விக்கொள்கையின் படி மாநிலக் கல்விக்கொள்கை இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்படவில்லை. தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் பெறும் பட்டத்தை 4 ஆண்டுகளாக படிக்க வேண்டும் என கூற முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாநிலங்களில் சென்று படிப்பதில் பாதிப்பு இல்லாத வகையில் உருவாக்கப்படும். பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பினை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும் எனவும் பரிந்துரைப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் - தாக்குதலுக்குள்ளான JNU மாணவர் வேதனை!