சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்குப் பிறகு, திமுக அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து தலைமை வழக்கறிஞராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட விஜய் நாராயண் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து, புதிய அரசு பதவியேற்றதும், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்க ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்தது.
இவ்வாறான தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரத்தை நியமிக்க 2021 மே மாதம் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் சட்ட ஆலோசகராகவும், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வழக்குகளையும் சண்முக சுந்தரம் கையாண்டு வந்தார்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், என்றும் வழக்கிறிஞர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் எனவும் அறிவித்த அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொடர்ந்து தொழில் புரிய போவதாகவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக, தனது ராஜினாமா கடிதத்தை தமிழக முதலமைச்சருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, ஒருசில நாட்களில் தமிழக அரசு புதிய தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விமானத்துக்குப் போட்டிப் போடும் ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி..!