தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை ஏற்று அத்தியாவசிய துறைகளைத் தவிர்த்து பிறர் அலுவலகம் வரத் தேவையில்லை என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “ தலைமைச் செயலகத்தில் அத்தியாவசிய துறைகளில், அவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பணியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அலுவலகம் வர விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டு அரசியலில் 'புது சிஸ்டத்தை கட்டமைக்கும் ஸ்டாலின்'