அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் விவகாரத்தில், புதிதாக உருவாகும் பல்கலைக் கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகப் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, தமிழ்நாடு பல்கலைக் கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் அருள் அறம், செயலாளர் சதாசிவம் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், ' அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தினை வழங்கி உள்ளது.
கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, கட்டடக்கலை பள்ளி ஆகிய நான்கு பல்கலைக்கழக துறைகளும், 13 உறுப்புக் கல்லூரிகளும், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மண்டலங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 593 கல்லூரிகளைக் கொண்டு செயல்படுகிறது.
தற்பொழுது பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்பதை மாற்றி, புதிய பெயர் வைக்க உள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரிலேயே இயங்கவேண்டும். புதிதாக தொடங்கப்படும் பல்கலைக் கழகத்திற்கு தமிழ்நாடு பொறியியல் பல்கலைக்கழகம் எனப் பெயர் வைத்துக் கொள்ளலாம்.
பெங்களூரு, ஹைதராபாத் பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவான பல்கலைக் கழகங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அத்துடன், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து, சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தை விரைந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் ' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு தகுதி - இம்மாத இறுதியில் கருத்துக் கேட்புக் கூட்டம்!