சென்னை: கரோனா தொற்றால் தனிநபர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைப் போல மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவு கண்டுள்ளது. மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துள்ளது. இதனை சீராக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயணன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக், ராஞ்சி பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் ட்ரெஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் பன்வாரிலால் இதனைத் தெரிவித்தார்.
உலகளவில் பெயர் பெற்ற குழு
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலையின்மை பிரச்னை, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இக்குழு முக்கிய கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழு உலகளவில் பெயர் பெற்ற, அதே சமயம் தமிழ்நாடு குறித்து நன்கறிந்த பொருளாதார நிபுணர்கள் ஆவர். இதில் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.
மோடி அரசின் நடவடிக்கை - விமர்சித்த ரகுராம் ராஜன்
இந்த குழு ஒன்றிய அரசுக்கு எதிர் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக 2013 முதல் 2016ஆம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனுக்கு, நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மீது அதிருப்தி இருந்தது அனைவரும் அறிந்ததே. உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணராக விளங்கும் ரகுராம் ராஜனின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் எனப் பலரிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இருப்பினும் அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படவில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி ஒன்றிய அரசு தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை எனப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அவருக்கு பிறகு உர்ஜித் பட்டேல் புதிய ஆளுராக பெறுப்பேற்ற மூன்று மாதங்களில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து, இது தவறான நடவடிக்கை, இதனால் ஏற்படும் பாதிப்புகள் பயன்களைவிட அதிகம் என விமர்சித்தார்.
GDP தவறாகக் கணக்கிடப்படுகிறது
அரவிந்த் சுப்ரமணியன் ஒன்றிய அரசின் பொருளாதார வளர்ச்சி குறியீடுகளில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். நாட்டின் ஜிடிபி (GDP - Gross domestic product) எண்கள் தவறாகக் கணக்கிடப்படுவதாகக் கூறினார். அரசின் பொருளாதாரக் கொள்கைகளை இன்றும் விமர்சித்து வருகிறார்.
தமிழ்நாட்டின் நீண்ட கால ஆலோசகர்
எஸ்தர் டஃப்லோ தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக நீண்ட நாள்களாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 2004 ஆம் ஆண்டு அவரும், அவருடைய கணவர் அபிஜித் பானர்ஜியும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து கிராமங்களில் முறையாக தண்ணீர் வசதி வழங்குவது, நீர் சேமிப்பு குறித்து ஆய்வு செய்து, அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்கள் செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் குறிப்பிடுகிறது. பின்னர் 2016 ஆம் ஆண்டு இவர்கள் நடத்திய ஜெ-பால் அமைப்புடன் பொருளாதார வழிகாட்டுதல்கள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அரசுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவர் அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான எம்ஐடியில் படித்தவர்.
நிபுணர்களின் கருத்துக்களை புறந்தள்ளுகிறது
ஒன்றிய அரசு, திறன் வாய்ந்த பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் தவறான திசையில் செல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பொருளாதார கொள்கைகளில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை, தேர்ந்த நிபுணர்களின் கருத்துக்களை மோடி அரசு புறந்தள்ளுகிறது என்கிற விமர்சனம் உள்ளது. இந்தநேரத்தில், தமிழ்நாடு அரசு பொருளாதார வழிகாட்டுதல் குழுவை நியமித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஊடக வெளிச்சத்தைத் தாண்டி, இதுபோன்ற புகழ்வாய்ந்த பொருளாதார நிபுணர்கள் மூலம் அந்நிய முதலீடுகளை அதிகரிக்க மாநில அரசு நினைப்பதாகக் கூறப்படுகிறது. இது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
தலைவர்கள் பாராட்டு
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்திலும் இதுபோன்ற பொருளாதார நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயரஞ்சன் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் பொருளாதார நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் தாராளமய பொருளாதார கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதே நேரத்தில் மாநில வளர்ச்சிக்கு குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை முன்னிறுத்துபவர். ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியம், அபிஜித் பேனர்ஜி போன்றோரை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சனம் செய்தவர் ஜெயஞ்ரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறுபட்ட கொள்கை கொண்டவர்கள்
பொருளாதார வழிகாட்டுதல் குழுவில் உள்ள பெரும்பான்மையானவர்கள் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், இது திமுகவின் சமூக நீதிக் கொள்கைக்கு முரணானது என பாஜக குற்றஞ்சாட்டுகிறது. சமுதாய பின்னணியைப் பார்க்காமல் அவர்களது கொள்கைகளைப் பார்க்க வேண்டும் என திமுகவினர் பதிலளிக்கின்றனர். மேலும் சிலரோ, இக்குழுவில் இடம் பெற்றுள்ள ஜீன் ட்ரெஸ் சற்று சோசியலிசக் கொள்கையின் ஆதாரவாளர், மற்றவர்கள் சந்தை பொருளாதாரத்தை ஆதாரிப்பவர்கள். இதனால் இது குழுப்பமான குழுவாக உள்ளது, இத்தனை நிபுணர்கள் ஒரே குழுவில் உள்ளதால் ஒருமித்த முடிவு எடுப்பதிலும் சிக்கல் ஏற்படும் என சிலர் கருதுகின்றனர்.
குழப்பங்கள் ஒருபுறம் இருப்பினும் சரிந்த பொருளாதாரத்தை இந்த குழு எந்த மாதிரியான பணிகளை முன்னெடுத்து மீட்கப் போகிறது எனப் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழு குறித்த அறிமுகம்