சென்னை: வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக வளாகத்தில் ஓட வைத்து ராக்கிங் செய்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ராக்கிங் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “ராகிங் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தினர் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனத்தினரின் அலட்சியம் காரணமாக காவல்துறையிடம் புகார் அளிப்பதில் தாமதம் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகிங்கில் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவரது பெற்றோர் நேரடியாக காவல்துறையிடம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாம் ஆண்டு மற்றும் சீனியர் மாணவர்களிடையே இணக்கம் ஏற்படும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் கல்வி நிறுவனத்தினால் நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராகிங் தடுப்பு குழு மற்றும் ராகிங் எதிர்ப்பு படை இருக்க வேண்டும். ராகிங்கில் ஈடுபடவோ அல்லது அதற்கு துணை புரிந்து விடவோ கூடாது என்ற உறுதிமொழியை ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொரு மாணவர்களிடமும் உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும்.
ஒவ்வொரு விடுதியிலும் அல்லது அதன் அருகாமையில் முழு நேர விடுதி கண்காணிப்பாளர் தங்கி இருக்க வேண்டும் என்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவல் நிலையங்கள் மற்றும் காவல் அதிகாரிகள் தங்களது தொலைபேசி எண்ணை அறிவிப்பு பலகைகளில் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவன வளாகங்களிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.
ராக்கிங் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாமதிக்காமல் விரைவாக முடிக்க வேண்டும். ராகிங் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க ராகிங் தொடர்பான புகார்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரியா மரணம்: சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கும்படி காவல்துறை கடிதம்!