சென்னை: ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று(ஏப்ரல் 8) பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, அசல் மௌலானா உள்ளிட்ட பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, "முதல்முறையாக அராஜக ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கு ஒரு ஜோடிக்கபட்ட வழக்கு. அவருக்கு சூரத்தில் தீப்பு வழங்கிய பிறகு அவர் அச்சம் இல்லாமல் அதை எதிர்கொண்டார்.
புதன்கிழமை எப்பொழுதும் இரு அவைக்கும் வருவார். அதுவும் முறையாக வராமல், தேசிய கீதம் ஒலிக்கும் போது மட்டும் வருவார். அப்படி இந்த வாரம் வரும் போது, நாங்கள் ரூ. 20,000 கோடி யாருடையது என்று கேட்டோம். அப்போது செத்த முகம் போல வந்து அமர்ந்து கொண்டு இருந்தார். பல அரசியல் வாதிகள் அரசு குடி இருப்பில் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் சார்ந்த பலர் இன்னும் வசித்து கொண்டு இருக்கிறார். அவர்களை இன்னும் ஏன் காலி செய்ய சொல்லவில்லை. ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். அதை நாம் சபதமாக எடுப்போம்" என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, "ராகுல் காந்தியை நேசிக்காத மக்களே இல்லை, சாதி மொழி, இனம் எனப் பாராமல் அனைவரும், ராகுல் காந்தி என்று நேசிக்கிறார், தீங்கு செய்வதாக நினைத்து பிரதமர் மோடியே ராகுல் காந்திக்கு நன்மை செய்திருக்கிறார். அதற்கு மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். ராகுல் காந்தியின் இரண்டாண்டு சிறை மீண்டும் இந்தியாவிற்கு விடுதலை பெறச் செய்யும்.
யார் மீது கை வைத்துள்ளீர்கள் என்று மோடி தெரிந்து கை வைத்திருக்க வேண்டும். பாட்டன் முப்பாட்டனார்கள் சேர்ந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த பேரனின் மீது கை வைத்துள்ளீர்கள். உங்களை நிச்சயம் சும்மா விட மாட்டோம். எங்களுக்கு பாவம் புண்ணியம் என்று எதுவும் தெரியாது. இயற்கை ஒன்று உள்ளது, இயற்கைக்கு எதிராக எது செய்தாலும் அது மோடிக்கு பாவமாக தான் மாறும். இந்திய இறையாண்மை மீதும், நீதிமன்றம் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் குறித்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மோடி எப்படியோ அப்படி தான் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியும் இருக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மட்டும் இல்லை, தமிழகத்தில் எல்லா வீடுகளிலும் இன்று go back Modi என்று கருப்பு கொடி ஏற்றபட்டுள்ளது" எனப் பேசினார்.
இதையும் படிங்க: Vande Bharat: சென்னை - கோவை வந்தே பாரத்.. டிக்கெட் விலை நிலவரம், மக்களின் கோரிக்கைகள் என்ன?