சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தனியார் காட்சி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை" என்று அவர் கூறியிருந்தார். இந்த கருத்து, காங்கிரஸ் கட்சியினர் இடைய பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக இந்தியா கூட்டணி தீர்மானம் இயற்றியுள்ளது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொடர்ந்து உள்கட்சி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த விஷயம் பெரிய அளவில் பூகம்பமாய் வெடித்துள்ளது. முன்னதாக மகளிர் உரிமை மாநாட்டிற்கு சென்னைக்கு வருகை தந்த போது, தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து வெளிப்படையாக கார்த்திக் சிதம்பரம் பேசினார் என்ற தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.
இதற்கு முன்னதாகவே, கார்த்தி சிதம்பரம் மீது ராகுல்காந்தி அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. ஆனால், தற்போது தனியார் காட்சி ஊடகத்தில் கார்த்தி சிதம்பரம் பேசிய கருத்து அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், "மோடியுடன் ஒப்பிடும் போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை" என்ற கருத்தை கார்த்தி சிதம்பரம் பேசிய கருத்துக்கு விளக்கம் கேட்டு கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவரும், செய்தி தொடர்பாளருமான கோபண்ணா கூறுகையில், இது குறித்து, ஊடகத்திடம் எந்த ஒரு தகவலும் நான் தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இதைத் தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ் - செய்தியாளர், கார்த்தி சிதம்பரத்தைத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டத்தில், "தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு சார்பில், இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு எந்த ஒரு நோட்டீசும் வரவில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் போராடும் மன உறுதி அளிக்கும்" - மு.க.ஸ்டாலின்