சென்னை : சனாதனம் குறித்து கருத்து வெளியிட்டு உள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதரவு தெரிவித்து உள்ளார். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து வெளியிட்ட கருத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் பிரதமர் மோடி கருத்து வெளியிட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அண்மையில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுகளை போன்று சனாதனமும் ஒரு கிருமி என்றும் அதை ஒழிக்க வேண்டும் எனறும் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பர்மஹன்ஸ் ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்தார். மேலும், யாரும் வெட்ட முன்வராதபட்சத்தில் தானே உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டுவதாக கூறி வீடியோ வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், உத்தர பிரதேச சாமியாருக்கு எதிராக திமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் பர்மஹன்ஸ் ஆச்சார்யா சாமியாரின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தியும், காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து உள்ளார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்ட கருத்து என்னவென்று தெரியாமலேயே பிரதமர் மோடி பதில் கருத்து வெளியிட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சனாதனத்தின் மனிதாபிமானமற்ற கொள்கைகள் குறித்து மட்டுமே அமைச்சர் உதயநிதி கருத்து வெளியிட்டதாகவும், அவரது கருத்து, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சனாதனக கொள்கைகள் குறித்தே இருந்ததாகவும் எந்த மதத்தையும், அதன் நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக சனாதன சர்ச்சை கருத்து குறித்து கட்சித் தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், தன் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க தயார் என்றும், உத்தர பிரதேச சாமியாருக்கு எதிராக கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க : Udhaynidhi Stalin : சனாதன சர்ச்சை.. "சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்வேன்.." - உதயநிதி ஸ்டாலின்!