சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், கத்திப்பாரா மேம்பாலம் போல சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று தான் அண்ணாநகர் டவர் பார்க் கோபுரம். அண்ணாநகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கிய அடையாளம் இந்த கோபுரம் ஆகும். இந்த கோபுரம் 1968-ஆம் ஆண்டு வர்த்தகம் மற்றும் தொழில் கண்காட்சிக்காக கட்டப்பட்டது.
அண்ணா நகர் பூங்கா சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் சிறிய அளவிலான குட்டை குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ள இடம் என பல வசதிகள் இருந்தாலும் 135 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் முக்கிய அடையாளமாக விளங்கி வருகிறது. இந்த கோபுரத்தின் மீது இருந்து பார்த்தால் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனமும் அருமையாக இருக்கும்.
2011-ஆம் ஆண்டு காதலர்கள் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டதால் மக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. அதற்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகாக திறக்கப்படாமல் இருந்தது.கோபுரம் திறக்கப்படாமல் இருந்தது பூங்காவை பயன்படுத்தும் பொது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
பூங்காவில் நடை பயிற்சி செய்வோர், இளைஞர்கள் என பலதரப்பட்டோரின் கோரிக்கையை ஏற்று பூங்காவின் கோபுரத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் பூங்காவை புனரமைக்க சென்னை மாநகராட்சி ரூ.89 லட்சம் ஒதுக்கியது. அதனைத் தொடர்ந்து 12 அடுக்குகள் கொண்ட இந்த கோபுரத்திற்கு மேலே செல்லும் சாய்தளம்(Ramp) முழுவதும் தடுக்கி விழாத வகையில் சிந்தடிக் மேட் பொறுத்தப்பட்டது மற்றும் கோபுரத்தின் மேல் தளத்தில் பாதுகாப்பிற்காக தரமான இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதே முக்கியத்துவம் அழகு படுத்தும் பணிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கோபுரத்தின் உச்சியில் கண்ணுக்கு கவர்ச்சியாக கூம்பு போன்ற வடிவத்தில் உள்ள வண்ண ஓவியங்கள், 135 அடி கோபுரம் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட இந்த கோபுரம் மீண்டும் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என சென்னை வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த வாரம் திறக்கவிருக்கும் இந்த பூங்காவை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.