சென்னை, வேளச்சேரியின் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானாவை ஆதரித்தும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அதன்படி, சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“பாஜக முழுவதும் ஏற்றத்தாழ்வு முறையே உள்ளது. இதைத் தவிர மோடி, அமித் ஷாவிற்கு எதுவும் தெரியாது. ஆனால் ஏற்றத்தாழ்வு உள்ள உறவு முறைக்கு பயன் இல்லை என்பதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் பார்வையில் தமிழ்நாட்டு மக்கள் சகோதர, சகோதரிகள். எங்களுக்கு தமிழ்நாடு மக்களிடம் இருந்து பாசம் மட்டும் தான் தேவை. எங்களிடம் இரண்டு சிந்தாந்தங்கள் உள்ளன. ஒன்று, எங்களுக்குக் கீழ் தான் ஆர்.எஸ்.எஸும் பாஜகவும். இன்னொன்று, சகோதரத்துவமும் பாசமும். இவற்றை நாங்கள் நம்புகிறோம்.
பன்முகத்தன்மை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, மோடியின் கால்களின் அடியில் உள்ளது கோபத்தை வரவழைக்கிறது. எனக்கு தமிழ்நாடு மக்களுடன் சமமான மரியாதை நிரம்பிய உறவு முறை வேண்டும். டில்லியிலிருந்து ஆட்சி செய்கின்ற தமிழ்நாடு எனக்கு வேண்டாம், தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் முறை வேண்டும்.
இந்தியா என்ற சிந்தனைக்கு மையப்புள்ளி, அனைத்து மொழி, பாரம்பரியம் ஆகியவற்றின் சங்கமம். மக்களுக்கான மரியாதை. தமிழ் மொழி போல் வங்காளம், கன்னடா, பஞ்சாபி மொழிகளும் முக்கியம். தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, அமித் ஷாவின் கால்களின் அடியில் உள்ளார். இதனை எந்தத் தமிழரும் விரும்ப மாட்டார்கள். அவரின் நேர்மையின்மையால் இன்றைக்கு அவர் இவ்வாறு உள்ளார். திமுக கூட்டணிக்கு எனது முழு ஆதரவு. பாஜகவை வீழ்த்த வேண்டும்.
தமிழ்நாட்டு அரசியலுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு புதிய சிந்தனை தேவைப்படுகிறது. அது நமது கலாச்சாரத்தில் காலுன்றியதாக இருக்க வேண்டும். தற்போது வெற்றி பெற உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதை முழுவதும் செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது டில்லியால் கட்டுப்படுத்தப்படும் அரசாக இருக்காது. 3000 ஆண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் யாருக்கும் தமிழர்கள் தலை குனிந்தது இல்லை. 3000 ஆண்டுகளில் இது போன்ற அவமரியாதை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டதில்லை.
தமிழர்களை நீங்கள் அரவணைத்தால் அவர்கள் உங்களை அரவணைப்பார்கள் என்பதை எங்கள் குடும்பம் நன்கு உணர்ந்துள்ளது. நீங்கள் இவ்வளவு அன்பு கொடுத்தால், அதைவிட பல மடங்கு தமிழர்கள் கொடுப்பார்கள். தமிழ்நாடு இந்தியாவிற்கு முக்கியமான அடித்தளம். எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால் தமிழ்நாடு மக்களின் உள்ளம் நன்றாகத் தெரியும். எனக்கு தமிழ் தெரிந்தால் இன்னும் உங்களை புரிந்து கொள்ள முடியும். அதைப் படித்து நான் தெரிந்து கொள்கிறேன்.
தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் சிலதை படித்து புரிந்து கொண்டுள்ளேன். பாஜக, ஆர்.எஸ்.எஸ் இங்கு வேரறுக்கப்படுவார்கள். தற்போதைய தேர்தல், அரசியல் கட்சிகளுக்கான சண்டை இல்லை. மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் பாஜக ஒரு புறம், மற்றவர்கள் ஒரு புறம். இவர்களை வீழ்த்த வேண்டிய சக்தி நமது கூட்டணி. ஸ்டாலின் நிச்சயம் முதலமைச்சர் ஆவார்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு