சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் 23.5.2023 முதல் 31.5.2023 வரை 7 நாட்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார். அவருடன் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
நேற்று சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், இன்று சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு நிலவும் சாதகமான சூழலை எடுத்துக்கூறி முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்தார்.
ஏற்கனவே டமாசெக் நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை உற்பத்தியில் முதலீடு செய்துள்ளநிலையில், மேலும் காற்றாலை உற்பத்தியை வலுப்படுத்தவும், கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவுமாறும் டமாசெக் நிறுவனத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் படியும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்தியாவின் மொத்த உணவுப் பதப்படுத்துதல் துறையில் தமிழகம் 8 சதவீதம் பங்களிப்பதையும், உணவுப் பதப்படுத்துதல் பூங்காக்களை அமைப்பதில் தமிழகம் கவனம் செலுத்தி வருவதையும் எடுத்துக் கூறி உணவுப் பதப்படுத்துதல் துறையில் டமாசெக் நிறுவனத்தை முதலீடு செய்ய கோரிக்கை விடுத்தார். டமாசெக் நிறுவனமும் தமிழ்நாட்டில் மீன்பிடி சார்ந்த தொழிதுறையிலும், உணவு பதப்படுத்துதல் துறையிலும் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க்-யை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கியமான மாநிலம் என எடுத்துக்கூறி, செம்ப்கார்ப் நிறுவனம் தமிழ்நாட்டின் எர்சக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்
சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தாவை சந்தித்தனர். அவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். pumped hydro storage திட்டங்களுக்கான வழிமுறையை இந்திய அரசி தற்போது எளிமையாக்கி உள்ளதால் PPP முறையில் தமிழ்நாட்டின் அரசுடன் இணைந்து செம்ப்கார்ப் நிறுவனம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார்.மேலும் இந்த நிறுவனங்களில் தலைமைச் செயல் அலுவலர்களிடம், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஜப்பான் பயணத்தின் போது ஒசாகாவிற்கும் செல்ல உள்ளார். இதுவரை ஜப்பான் சென்றுள்ள அரசு குழுக்கள் டோக்கியோ மட்டுமே சென்றுள்ளதாகவும், முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் ஒசாக செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒசாகாவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகாவில் ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து அங்குள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டோக்கியோவில் ஜப்பானின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிஷுமுரா யசுதோஷி, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Area sabha: ஆண்டுக்கு 4 முறை ஏரியா சபை கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஆணை!