சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி - வினயா கஸ்தூரி தம்பதியினர். இவர்களுக்கு யத்தீந்திரா(12) மற்றும் வாகீந்திரா (10) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் முதல் மகனான யத்தீந்திரா ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் யத்தீந்திரா, தான் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மலையேறும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இதில் மேற்கொண்ட கடுமையான பயிற்சியால், கடந்த ஏப்ரல் மாதம் இமயமலைத் தொடரில் 4 நாட்களில் 14,000 அடி உயரத்தை ஏறிய இந்தியாவின் முதல் சிறுவன் என்ற சாதனைப் படைத்தார். இதைத் தொடர்ந்து சகோதரர்களான யத்தந்தீரா, வாகீந்திரா இருவரும் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இமயமலையில் ஏழு நாட்களில் 17,000 அடி, 15,000 அடி 14,000 அடி ஆகிய மூன்று மலை சிகரங்களை ஏறி சாதனைப் படைத்துள்ளனர். இந்த உயரத்தைத் தொட்ட முதல் சகோதரர்கள் இவர் ஆவர்.
இளைய சகோதரர் வாகீந்திரா, இதற்கு முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில் 10 வயதுடைய சிறுவன் ஏழு நாட்களில் 2 மலை ஏறிய உயரத்தில் ஏறி சாதனை புரிந்ததை முறியடித்துள்ளார். இதையடுத்து மலைகளை ஏறி சாதனைப் படைத்த சகோதரர்கள், இருவரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
அவர்களுக்கு அவரது உறவினர் மற்றும் பெற்றோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாதனை சகோதரர்களின் தாய் விஜயகஸ்தூரி, “முதல் மகன் முதலில் 14,000 அடி உயரத்தில் மலை ஏறி சாதனைப் படைத்தார். தற்போது, அந்த சாதனையை முறியடித்து இரண்டு மகன்களும் ஒன்றாக மூன்று மலைகளை ஏறி சாதனைப் படைத்துள்ளனர். இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்துள்ளனர். மிகவும் கடினமாக உழைத்து இருவரும் சாதனைப் படைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறுவர்களின் பயிற்சியாளர் ஆண்ரூஸ் ஜோஸ் கூறுகையில், “தொடர்ந்து மூன்று மலைகளை ஏறிய இந்தியாவின் முதல் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்ற சாதனையை யத்தீந்திரா படைத்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், ஏழு நாட்களில் இரண்டு மலைகளை ஏறி சாதனை படைத்திருந்தார் என்பதை முறியடித்து, வாகீந்திரா ஏழு நாட்களில் தொடர்ச்சியாக மூன்று மலைகள் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் யத்தீந்திரா கூடுதலான பயிற்சிகளைப் பெற்று, டன்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ என்ற மலையை ஏறி சாதனை படைக்கவுள்ளார். அதேநேரம், மாணவர்கள் கிரிக்கெட், ஹாக்கி என்று ஒரே விளையாட்டை பின்பற்றாமல் தனக்கு ஆர்வமுள்ள விளையாட்டை தேர்ந்தெடுத்து, அதில் சாதனைகள் படைக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாகக் கூறிய சகோதரர்கள் இருவரும், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துக்கள் பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தன்னம்பிக்கை இருந்தால் கால்களும் கைகளாக மாறும்': +2 பொதுத்தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி!