சென்னை: திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அதனோடு அவர் வைத்திருக்கும் ரஃபேல் வாட்ச்சிற்கான பில்லையும் வெளியிட்டார். திமுகவினருடைய சொத்து பட்டியலை வெளியிட்டுவதற்கு காரணமாக அமைந்தது இந்த ரஃபேல் வாட்ச் விவகாரம். இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்று மாலைக்குள் அண்ணாமலை ரஃபேல் வாட்ச்சிற்கான பில்லை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ளும் போது பில்லை வெளியிடுவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று(ஏப்ரல் 14) ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்ச் வாங்கிய பில்லை வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அண்ணாமலை, "நான் கர்நாடகாவில் ஐபிஎஸ் பணியில் இருந்த போது ரஃபேல் வாட்ச்சை லஞ்சமாக வாங்கியதாக திமுகவினர் என் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தனர். இந்தியாவில் ரஃபேல் வாட்ச் இரண்டு பேரிடம்தான் உள்ளது. நான் சாமானிய மனிதனாக அரசியலுக்கு வந்திருக்கிறேன். மாதத்திற்கு 7 முதல் 8 லட்சம் செலவு ஆகிறது. நான் வைத்திருக்கும் கார் என்னுடையது கிடையாது. என்னுடைய உதவியாளர்களுக்கு சம்பளம் என்னுடைய நண்பர்கள் கொடுக்கிறார்கள்.
நான் இருக்கும் வீட்டிற்கும் வாடகை என்னுடைய நண்பர்கள் கொடுக்கிறார்கள். இதே போன்றுதான் என்னுடைய நண்பன் சேரலநாதன் என்பவர் எனக்கு இந்த ரஃபேல் வாட்ச்சை வாங்கி கொடுத்தார். அதற்கான பில்லை உங்களிடம் கொடுக்கிறேன். இந்த பில்லில் மை இல்லை, கம்மா இல்லை என்று குற்றச்சாட்டெல்லாம் வைக்க முடியாது. இது கோவையில் உள்ள தனியார் வாட்ச் நிறுவனத்திடம் 2021ஆம் ஆண்டு மே மாதம் வாங்கியது. ஒரு சாமானியனாக இந்த பில்லை வெளியிடுகிறேன்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சேரலநாதன் ஒன்றும் எனக்கு தெரியாதவர் கிடையாது. கிட்டத்தட்ட என இரண்டு வருடங்களாக தெரியும். 27.5.2021 இல் இருந்து என் கையில் இருக்கக் கூடிய ஒரே வாட்ச் இது மட்டும் தான். நான் மாசத்திற்கு, வாரத்திற்கு ஒரு வாட்ச் கட்டும் ஆள் கிடையாது. ஒரே வாட்சை 2 ஆண்டுகளாகக் கட்டிக் கொண்டுள்ளேன். காரணம் இந்த வாட்சின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும். ரூ.3 லட்சத்திற்கு இந்த வாட்சை வாங்கியுள்ளேன், விலையை தாண்டி இதை ஒரு காரணத்திற்காக இந்த வாட்சை கட்டியுள்ளேன் என அண்ணாமலை" தெரிவித்தார்.