சென்னை: 2022 -23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மாதம் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வேளாண்பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு பட்ஜெட் மீதும், 24ஆம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டது. அமைச்சர்கள் பதிலுரைக்குப் பின், சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், துறை வாரியான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடத்தி, துறைகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு ஒப்புதல் பெற, நாளை(ஏப்.6) முதல் மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. நாளை, நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. அதன்பின், ஒவ்வொரு நாளும், இரண்டு அல்லது மூன்று துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. நாளை தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர், மே மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் போக, மொத்தம் 22 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
முக்கிய பிரச்னைகள்: சொத்து வரி உயர்வு, 'நீட்' தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, திமுக தேர்தல் வாக்குறுதிகள் எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அனல் பறக்க வாய்ப்புள்ளது. அதை எதிர்கொள்ள ஆளும் திமுகவும் தயார் நிலையில் உள்ளது.
ஒவ்வொரு துறை மானியக்கோரிக்கை விவாதம் நிறைவடைந்ததும், அந்த துறை அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். அதேபோல், சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை, முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேரலை: சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கேள்வி நேரம் மற்றும் அவை விதி 110இன் கீழ் முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அமைச்சர்கள் வழங்கும் பதில்களும் நேரலை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ஆறுமுகசாமி ஆணையத்தில் கூடுதல் விளக்கங்கள் அளித்த அப்போலோ மருத்துவர்கள்